சனி, 5 ஜூலை, 2025

உன் நம்பிக்கை உன்னை குணமாக்கிற்று(7.7.2025)

“உன் நம்பிக்கை உன்னை குணமாக்கிற்று”

(மத்தேயு 9:22)


அன்புக்குரிய சகோதர சகோதரிகளே,
இன்றைய நற்செய்தி வாசகம் இருவரின் நம்பிக்கையையும்... இயேசுவின் இரக்கத்தையும்... நாம் அறிந்து கொள்ள உதவுகிறது. 

நம் நடைமுறை வாழ்வில் மிகவும் எளிதாக  நம்பிக்கையைக் கைவிடக்கூடிய நிலையில்தான் அவர்கள் நம்பிக்கையை உறுதியாக பிடித்திருந்தனர் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் சுட்டிக்காட்டுகிறது. 

1. தொழுகைக் கூடத் தலைவரின் நம்பிக்கை: மரணத்திற்கும் மேற்பட்ட நம்பிக்கை...

முதலில் இயேசு  தம்மை நோக்கி வந்து பணிந்த தொழுகைக் கூடத் தலைவர் தன் மகள் இறந்துவிட்டாள் என்பதை அறிந்தும், இயேசுவிடம் நம்பிக்கையோடு வருகிறார்.

அவரின் எளிய வேண்டுதல் ...
“நீர் வந்து அவள் மீது கையை வையுங்கள், அவள் உயிர் பெறுவாள்.”
இது ஒரு ஆழமான நம்பிக்கையின் வெளிப்பாடு.


இவர் மகிழ்வான தருணத்தில் ஆண்டவரை நோக்கி சென்றவர் அல்ல; இனி எவராலும் எதுவும் செய்ய முடியாது என தெரிந்தும் ஆண்டவர் இயேசுவால் முடியும் என நம்பி நம்பிக்கையோடு சொல்கிறார்.

அன்புக்குரியவர்களே, நாம் வாழும் இந்தக் காலத்தில் மரணத்தின் முன்னிலையில் நம்பிக்கையுடன் நிற்பது மிகவும் கடினமான காரியம். ஆனால் இயேசுவை அறிந்தவர்கள் மரணம் என்பது முடிவல்ல, அது புதிய தொடக்கம் என்பதைக் கற்றுக்கொண்டார்கள் அதையே நாமும் கற்றுக்கொள்ள என்று அழைக்கப்படுகிறோம்.

2.  பன்னிரண்டு ஆண்டுகளாக இரத்தப் போக்கால் துன்புற்ற பெண்ணின் உண்மையான நம்பிக்கை:

பன்னிரண்டு ஆண்டுகளாக இரத்தப் போக்கால் துன்புற்றிருந்தவர். அவர் மக்களின் கூட்டத்தில் இருந்து யாராலும் அறியப்படாமல் இயேசுவின் ஆடையின் ஓரத்தைத் தொட்டார்.
அவர் தொட்டதற்கான காரணம்
“அவருடைய ஆடையைத் தொட்டாலே போதும், நலம் பெறுவேன்” என்ற ஆழமான, உண்மையான  நம்பிக்கையின் வெளிப்பாடு.  

இயேசு திரும்பிப் பார்த்து “மகளே, துணிவோடிரு. உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று” என்கிறார்.

இது வெறும் வார்த்தை இல்லை. இது மருந்தைக் காட்டிலும் மகத்துவம் வாய்ந்தது.


நம் வாழ்க்கையிலும் அந்த நம்பிக்கையை நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. நம்மால் இயேசுவை முழுமையாக நம்ப முடியுமா?  என்ற கேள்விக்கு இப்பெண்ணே நமக்கான முன் உதாரணம் ...

3. மரணத்தை வென்றவர் இயேசு 

இயேசு அந்த சிறுமியின் வீட்டுக்குச் செல்கிறார். அங்கு கண்ணீர், குழல், குழப்பம், கலக்கம். ஆனால் இயேசு அமைதியுடன் சொல்கிறார்:
“சிறுமி இறக்கவில்லை… உறங்குகிறாள்”
உலகம் “மரணம்” என்று சொன்ன இடத்தில் இயேசு “தூக்கம்” என்று சொல்கிறார். ஏனெனில் இயேசுவின் பார்வையில் மரணம் என்பது முடிவல்ல அது ஒரு தொடக்கம்.  

இயேசு அந்த சிறுமியின் கையைத் தொட்டார், அவள் உயிர் பெற்று எழுந்தாள்.
இது இன்று நமக்கான ஒரு நம்பிக்கையின் அழைப்பு.
இன்றும் இயேசு நம்முடைய தீய செயல்கள் மிகுந்த வாழ்க்கையில் இறந்த நிலையில் இருக்கும் நம்மை  தொட்டாலே போதும், நமக்குள் புதுவாழ்வு பிறக்கும் இதற்கு ஆழமான நம்பிக்கை தேவை இறைவன் நம்மை மன்னிக்கிறார் மனதார ஏற்றுக் கொள்கிறார் மீண்டும் நமது வாழ்வை புதுப்பிக்க ஒரு வாய்ப்பு தந்திருக்கிறார் என்ற ஆழமான நம்பிக்கையோடு நாம் அனுதினமும் பயணிக்க வேண்டும். அவ்வாறு பயணிக்கும் போது 

“உன் நம்பிக்கை உன்னை குணமாக்கிற்று”
இவ்வார்த்தை இயேசுவால் இன்று நம்மை நோக்கியும் சொல்லப்படும் ...
இந்நாளில் நம் நம்பிக்கையை புதுப்பித்து, இயேசுவின் அருகில் செல்ல இதயத்தில் உறுதி ஏற்போம் இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார் ....


என்றும் அன்புடன் 

அருள்பணி ஜே. சகாயராஜ் 

திருச்சி மறைமாவட்டம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Your Faith Has Made You Well - (7.7.2025)

"Your Faith Has Made You Well" (Matthew 9:22) Dear brothers and sisters in Christ, Today’s Gospel passage helps us ...