"கொடை என வந்தது, கொடை என செல்லட்டும்!"
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே,
இன்றைய நற்செய்தியில் இயேசு நம் வாழ்விற்கு மிகவும் உன்னதமான ஒரு வாழ்வுக்கான வாழ்க்கை பாடத்தை கற்பிக்கிறார். அது “கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்” என்பதாகும்.
சாதி, மதம், இனம், மொழி என வேறுபாடுகளை மட்டுமே மையப்படுத்தி வாழ்கின்ற மனித இனம் கடவுள் கொடுத்த அன்பையும், இரக்கத்தையும், மன்னிப்பையும் அடுத்தவரோடு பகிர்ந்தும்... இறைவன் கொடுத்த செல்வங்களை இயன்றவரோடு பகிர்ந்தும் வாழும் மனம் படைத்தவர்களாக வாழ வேண்டும் என்பதை இன்றைய இறை வார்த்தை நமக்கு சுட்டிக் காட்டுகிறது...
இன்றைய வாசகங்களை மையப்படுத்தி நாம் நான்கு காரியங்களை சிந்திக்க அழைக்கப்படுகிறோம் ...
1. விண்ணரசு பறைசாற்றும் பணிக்கு அனைவரும் அழைக்கப்படுகிறோம்...
இயேசு சீடர்களை அனுப்பும்பொழுது, "விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது" எனப் பறைசாற்றும்படி கட்டளையிடுகிறார். இதுவே இன்று இறைவன் நமக்கும் தருகின்ற அழைப்பாக இருக்கிறது. நாம் எங்கு சென்றாலும், எவரைச் சந்தித்தாலும், நம் வார்த்தைகள், செயல்கள் அனைத்தும் ஆண்டவர் இயேசுவின் இறையாட்சியின் மதிப்பீடுகளை உள்ளடக்கியதாக அமைய வேண்டும்... இவைகளின் மூலமாக இறைவனின் விண்ணரசை பற்றிய நற்செய்தியை பறைசாற்றும் நபர்களாக நாம் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இன்று அழைக்கப்படுகிறோம்.
2. கொடையாக பெற்றதை கொடையாகவே பகிர்வோம்...
நாம் பெற்றுள்ள எல்லா அருள்களும் இறைவனுடைய கொடை...:
- நம் உடல் ஆரோக்கியம்,
- நம் உணர்வு நலம், (மன நலம்)
- நம் அறிவு,
- நம் உணவுப் பாதுகாப்பு,
- நம் குடும்பம், சமூக உறவுகள்,
- முக்கியமாக நம் நம்பிக்கையும் இரக்கமும் — இவை அனைத்தும் நமக்குத் தரப்பட்ட கொடை....
இவை நமக்கு மட்டுமல்ல, மற்றவர்களுடன் பகிர்வதற்காகவே....
இந்த பகிர்ந்து வாழும் மனமே இறைவன் இன்று நம்மிடம் எதிர்பார்க்கும் எதிர்பார்ப்பாக இருக்கிறது....
3. நம்பிக்கையே நம் பணியின் மையம்:
இயேசு சீடர்களிடம் சொல்கிறார்:
“பொன்னோ, வெள்ளியோ... பையோ, கூடுதல் ஆடையோ எடுத்துக்கொள்ள வேண்டாம்.”
என்கிறார். இவ்வார்த்தைகள் வழியாக நமது பணி என்பது பணத்தையோ பொருளையோ மையப்படுத்தி இல்லாமல் ஆண்டவர் மீது கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை மையப்படுத்தி அமைய வேண்டும் என்பதை இதயத்தில் நிறுத்திக் கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம் ...
சகோதர சகோதரிகளே,
இயேசுவிடம் இருந்து நாம் ஏராளமான கொடைகளை பெற்றுள்ளோம். இன்று அவர் நம்மைப் பார்த்து:
"நீங்கள் கொடையாகப் பெற்றீர்கள்... கொடையாகவே வழங்குங்கள்."
இது பணம் அல்லது பொருளை மையப்படுத்தியது அல்ல.. மாறாக
உங்கள் நேரத்தை,
உங்கள் கவனத்தை,
உங்கள் மனஅமைதியை,
உங்கள் இரக்கமுள்ள வார்த்தையை பகிருங்கள்.
அப்போதுதான் நம் வாழ்க்கை இயேசுவின் அடிச்சுவட்டில் பயணிப்பதாக அமையும் ...
இதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறை வேந்தல் செய்வோம் இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார் ...
என்றும் அன்புடன்
அருள்பணி ஜே. சகாயராஜ்
திருச்சி மறை மாவட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக