வெள்ளி, 4 ஜூலை, 2025

புதிய மாறுதல் – புதிய தோற்பையாகும்....(5.7.2025)

புதிய மாறுதல் – புதிய தோற்பையாகும்....

பழைய தோற்பைகளில் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை
(மத்தேயு 9:17)
அன்புக்குரிய சகோதர சகோதரிகளே, இன்றைய நற்செய்தியில் இயேசு  "பழைய தோற்பைகளில் புதிய திராட்சை மதுவை ஊற்றினால், தோற்பைகள் சிதைந்து மதுவும் பாழாகும்."
என்கிறார். இவ்வார்த்தைகள் புதிய வாழ்க்கை, புதிய மனப்பான்மை, புதிய உறவுகள், புதிய கட்டமைப்புகள் பற்றிய இயேசுவின் இறையாட்சி குறித்து சிந்திக்க அழைப்பு விடுக்கிறது.


முதலில் நாம் பழைய தோற்பைகள் எவை...? என்பதை அறிவோம்...

பழைய தோற்பைகள் என்பது பழைய பழக்கவழக்கங்கள், கடுமையான சட்டங்கள், மனதில் உறைந்துள்ள (பிரறை பற்றிய முன்சார்பு) பழமையான எண்ணங்கள் எனலாம்.

பரிசேயர் மற்றும் மறைநூல் அறிஞர்கள் கடைபிடித்திருந்த கடினமான சட்டங்களில் அன்பும் இரக்கமும் குறைவாகவே காணப்பட்டது. முற்றிலும் இல்லை என சொல்லலாம்...

அவர்கள் இயேசுவின் புதிய வழியான  இரக்கம், கருணை, பாவிகளை (ம) நமக்கு எதிராக குற்றம் இளைத்தவர்களை ஏற்கும் அன்பு ஆகியவற்றை புரிந்துகொள்ளவில்லை. புரிந்துகொள்ள முயற்சிக்கவும் இல்லை.


இன்று நமக்குள் இருக்கும் பழைய தோற்பைகள் எவை? என சிந்திப்போம்....

 1. மற்றவர்களை மன்னிக்க முடியாத மனநிலை
 2. கடவுளை கடமையாக மட்டுமே பார்க்கும் இயந்திர நடத்தை
 3. சமய வாழ்வில் உயிரற்ற (ஈடுபாற்ற) பழக்கங்கள்

இரண்டாவதாக: புதிய திராட்சை மதுவின் அர்த்தம் என்ன? என சிந்திப்போம்...

புதிய திராட்சை மது என்பது இயேசு கொண்டுவந்த புதிய வாழ்வின் அடையாளங்கள். 
அவை இறைவனின் ஆசீர், வாழ்வூட்டும் நம்பிக்கை, உன்னதமான கள்ளம் கபடம் அற்ற அன்பு.

இயேசுவின் வருகை என்பது பழைய சட்டங்களை ஒழிக்கவில்லை; ஆனால் அவற்றை முறைப்படுத்தியது.  அதாவது அதன் உள்ளார்ந்த அர்த்தத்தை நமக்கு உணர்த்தியது.

இன்று நாம் எதை புதிய மதுவாக ஏற்கிறோம்? என சிந்திப்போம்...

1. இறைவேண்டல்கள் செய்வது.
2. திருப்பலியில் பங்கெடுப்பது.
3. இறைவார்த்தையை வாழ்வாக்குவது.

மூன்றாவதாக: புதிய மாறுதல் – புதிய தோற்பையாகும்....

புதிய மதுவைப் பாதுகாக்க, புதிய தோற்பை அவசியம். அதாவது, புதிய எண்ணங்கள், மாற்றத்திற்கான செயல்கள் அவசியம். இதற்கே இன்றைய நற்செய்தி நம்மை அழைக்கிறது: பழையதை விட்டுவிட்டு இன்றுமுதல் புதியதை ஏற்போம்.

நாம் புதிய தோற்பையாக மாற சில பரிந்துரைகள்?
1. நாம்  செய்யும் இறைவேண்டல்கள் அர்த்தம் உணர்ந்து செய்திடல் வேண்டும்.
 2. முழுமையான ஈடுபாட்டுடன் திருப்பலியில்  பங்கேற்றல்.
3. தவறுகளை சரிசெய்து  மனமாற்றம் கொண்டவர்களாய் மனிதநேயத்துடன் வாழ்வோம்.

எனவே... அன்பார்ந்தவர்களே,
இயேசு இன்று நம்மிடம் ஒரு அழைப்பை விடுக்கிறார். அது “பழைய தோற்பைகளில் புதிய திராட்சை மதுவை ஊற்ற வேண்டாம்.”
அதாவது, நாம் புதிய வாழ்வுக்குரிய மனப்பான்மையுடன் வாழ வேண்டும். நம் உள்ளங்களை புதுப்பித்து, ஆண்டவரின் அருளை ஏற்கும் வகையில் தயாராகிட இன்றைய நாளில் இறையருள் வேண்டுவோம்... இறைவன் நம்மை நிறைவாக ஆசீர்வதிப்பார்....

என்றும் அன்புடன்...
அருள்பணி. ஜே. சகாய ராஜ்,
திருச்சி மறைமாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Your Faith Has Made You Well - (7.7.2025)

"Your Faith Has Made You Well" (Matthew 9:22) Dear brothers and sisters in Christ, Today’s Gospel passage helps us ...