இறைவனா?... மனிதனா...?
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
செபம், தபம், தர்மச் செயல்கள் கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படையானவை. இந்த மூன்றிலும் நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை இன்றைய நாள் இறைவார்த்தை வழியாக இறைவன் நமக்கு உணர்த்துகின்றார்.
நாம் முன்னெடுக்கின்ற செபமாக இருந்தாலும் சரி, தவச் செயல்களாக இருந்தாலும் சரி, அல்லது தர்மச் செயல்களாக இருந்தாலும் சரி, இவை மூன்றுமே இதயத்தில் இறைவனை முன்னிறுத்தி நடக்கிறதா? அல்லது இருக்கிற மனிதர்களை முன்னிறுத்தி நடக்கிறதா? மனிதர்களின் புகழுக்கும், அவர்களின் நன்மதிப்புக்காக இவை இடம் பெறுகிறதா? அல்லது இதயத்தில் உறைந்திருக்கும் இறைவனை உணர்ந்து கொள்ளவும், அவர் மீது நாம் கொண்டுள்ள ஆழமான நம்பிக்கையின் அடிப்படையில் இவை நடைபெறுகிறதா? என்ற கேள்வியை நமக்குள்ளாக எழுப்பிப் பார்க்க இன்றைய நாள் இறைவார்த்தை வழியாக நாம் அழைக்கப்படுகின்றோம்.
இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எலியாவின் வழியாக வெளிப்பட்ட ஆண்டவரின் வார்த்தைகளுக்கு இணங்கி, அவ்வார்த்தைகளுக்கு ஏற்ப தன் வாழ்வை, அமைத்துக் கொண்ட, எலியாவை பின்பற்ற விரும்பிய எலிசாவை போல நமது வாழ்வு, ஆண்டவர் இயேசு கிறிஸ்து கூறக் கூடிய வார்த்தைகளின் அடிப்படையில் அமைய வேண்டும். நாம் தவத்திலும், தர்மம் செயலிலும், செபத்திலும் எப்படி இருக்க வேண்டும் என இறைவன் இன்று கற்பிக்கின்றார்.
இதயத்தில் உள்ள இறைவனை மையப்படுத்தி இவை தொடருகிறது என்றால், இறைவனுக்கு நன்றி கூறுவோம். இருக்கிற மனிதர்களை மையப்படுத்தி இவை நமது வாழ்வில் அரங்கேறுகிறது என்றால், அதனைத் தவிர்த்து,
இறைவனுக்கு உகந்த ஒரு வாழ்வு வாழ, இறைவன் இன்று நமக்குக் கற்பிக்கும் பாடத்தை இதயத்தில் இருத்தி, வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக செபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக