நமது செயல்கள் மூலம் வெளிகாட்ட ...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்றைய முதல் வாசகத்தில் பவுல் மீதான குற்றச்சாட்டை விசாரிக்கும்படி அகிரிப்பா என்பவர் பெஸ்து என்பவரிடம் கூறியபோது, அவர், குற்றம் சாட்டப்பட்ட ஒரு மனிதன் தனது குற்றத்தை பற்றி விளக்குவதற்கான வாய்ப்பை நாம் தர வேண்டும் எனக் கூறுகின்றார். அது அவரின் இதயத்து எண்ணத்தையும் வாழ்வில் அவர் பின்பற்றிய அறத்தையும் வெளிக்காட்டுகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து பேதுருவைப் பார்த்து என்னை நீ அன்பு செய்கிறாயா? என மும்முறை கேள்வி எழுப்புகிறார். இருமுறை, "ஆம்! அன்பு செலுத்துகிறேன்!" என பதில் கூறிய பேதுரு, மூன்றாம் முறை, ஆண்டவரே எல்லாம் உனக்கு தெரியுமே எனக்கூறி, தன் உள்ளத்து எண்ணத்தையும் தன் வாழ்வில் அவர் இயேசுவின் மீது கொண்டிருந்த அன்பையும் வெளிப்படுத்துகின்றார் .
பேதுருவின் வாழ்வில் இயேசுவோடு நடந்த இந்த உரையாடல் பேதுருவின் எண்ணத்தை, அவர் இயேசுவின் மீது கொண்டிருந்த அன்பை அனைத்து சீடர்களுக்கும் வெளிகாட்டும் வகையில் உருவான ஒரு உரையாடல் என்றுதான் நாம் பார்க்கவேண்டும். இயேசுவின் சீடர்களுள் அறிவில் சிறந்தவரான யோவான் போன்ற திறமையானவர் அல்ல இந்த பேதுரு. பவுலைப் போல படித்த, திறமையோடு இறைவார்த்தையை அறிவிக்கும் புலமை பெற்றவர் அல்ல இந்தப் புனிதப் பேதுரு... ஆனால், இந்தப் பேதுருவை தான் இயேசு திரு அவையின் தலைவராக உருவாக்கினார். இந்தப் பேதுருவின் இறுதிநாட்கள் எப்படி இருக்கும் என்பதை இயேசு இன்றைய இறைவார்த்தை வழியாக பேதுருவுக்கு முன்னறிவித்தார்.
நாம் பார்ப்பது போல இந்த இறைவன் மற்றவரை பார்ப்பவர் அல்ல ....நமது இதயங்களை ஆய்ந்து அறிந்துள்ள இறைவன் இன்றைய நாள் இறைவார்த்தை வழியாக நாம் இதயத்தில் இருத்தியுள்ள அறம் சார்ந்த செயல்களையும், ஆண்டவர் மீதான அன்பையும் குறித்து இன்றைய நாளில் ஆழமாக சிந்திக்க நமக்கு அழைப்பு தருகின்றார்....
வெறும் வார்த்தையின் வடிவில் மட்டும் நான் உம்மை அன்பு செய்கிறேன் எனச் சொல்லி விட்டு சென்றவர் அல்ல, இந்தப் பேதுருவும். தனது வார்த்தையை வாழ்வாக்கியது போன்று நம்மையும் வாழ்வாக்க அழைப்பு விடுக்கின்றார்.
நாம் இறைவன் மீது எத்தகைய அன்பு கொண்டவர்கள் என்பதை இந்தச் சமூகத்தில் நமது செயல்கள் மூலம் வெளிகாட்ட நாமும் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக