அன்னை மரியாவின் திரு இருதயம்...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்று தாய் திரு அவையானது தூய கன்னி மரியாவின் தூய்மை மிகு இதயத்தை நினைவுகூர நமக்கு அழைப்பு விடுக்கிறது. ஆண்டவர் இயேசுவின் திருஇருதயத்தின் பெருவிழாவிற்கு அடுத்து வருகின்ற நாளை அன்னை மரியாவின் திரு இருதயத்திற்கு ஒப்புக்கொடுத்த செபிக்கின்றன நாளாக திரு அவை அனுசரித்து வருகிறது.
அன்னையின் இதயத்தோடு இணைந்து நமது இதயமும் இறைவனைப் புகழ கூடியதாக, இறைவனது வார்த்தைகளை உள்ளத்தில் இருத்தி சிந்திக்கக் கூடியதாக அமைய வேண்டும் என்பதை இன்றைய நாள் விழா நமக்கு வலியுறுத்துகிறது.
ஆண்டவர் மரியாவின் வாழ்வில் செயல்படுத்திய அனைத்து செயல்பாடுகளையும், மரியா உள்ளத்தில் இருத்தி ஆழமாகச் சிந்தித்தார் என விவிலியத்தின் வாயிலாக நாம் அறிந்து கொள்கிறோம். வாழ்வில் இன்பங்கள் வந்த போதும் துன்பங்கள் வந்த போதும், மரியா துவண்டு போய் விடாமல், அனைத்தையும் கடவுளின் திட்டம் எனக் கருதி, அனைத்தையும் இதயத்தில் இருத்தி சிந்தித்து, தன் வாழ்வை ஆண்டவருக்கு உகந்த ஒரு வாழ்வாக மாற்றினார். தன் மகனுக்கும் அதன் வழி துணை நின்றார்.
இத்தகைய அன்னை மரியாவின் இதயத்தை நாமும் பெற்றுக் கொள்ள, இந்த நாளில் அழைக்கப்படுகிறோம். இன்றைய நாளில் நாமும் அன்னை மரியாவோடு இணைந்து நமது இதயத்தை இறைவன் பால் திருப்புவோம். ஆண்டவரின் வார்த்தைகளை இதயத்தில் இருத்தி ஆழமாக சிந்தித்து, அந்த சிந்தனைக்கு நமது வாழ்வில் செயல்வடிவம் தருகின்ற மனிதர்களாக மாறுவோம். அன்னை மரியாவின் இதயத்தோடு நமது இதயத்தையும் இணைத்துக் கொண்டு இறைவனைப் புகழ இன்றைய நாளில் இந்த திருப்பலி வழியாக இணைந்து செபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக