சனி, 4 ஜூன், 2022

வாக்கு மாறாதவர் கடவுள்...(5.6.2022)

வாக்கு மாறாதவர் கடவுள்....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
      ஒரு அழகிய கிராமம். அந்த கிராமத்திலே மிகவும் கொடூரமான ஒரு மனிதன் இருந்தான். உலகத்தில் சொல்லக்கூடிய அத்தனை தீய பழக்கங்களையும் கொண்டிருந்தவன். அவன் ஒரு காட்டுப் பாதையில் நடந்து கொண்டிருந்தான். அதே காட்டுப்பாதையில் எதிர்முனையில் ஒரு நிறைமாத கர்ப்பிணி பெண்ணும் நடந்து வந்தாள். நடுக் காட்டை அடைந்தபோது அவளுக்கு பேறுகால வலி வந்தது. துடிதுடித்தவளாய், என்ன செய்வது? என்று தெரியாமல் அருகில் இருந்த மரத்தின் அடியில் அமைதியின்றி நிலை தடுமாறி விழுந்தாள். பிரசவ வலி வேதனையில் துடித்துக்கொண்டிருந்தாள். யாராவது வந்து நம்மை காக்க மாட்டார்களா? என்ற நினைப்போடு வழியைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். அவள் கண்ணில் பட்டது, இந்த சமூகத்தால் அயோக்கியன் என கருதப்பட்ட அந்த கொடூர மனிதன் மட்டுமே. இவனையா நான் பார்க்கவேண்டும்! இவன் எப்படி எனக்கு உதவி செய்வான் என்று அந்த பெண்ணின் மனதில் பலவிதமான எண்ணங்கள் ஒருபுறம். மறுபுறமோ வலியும் வேதனையும். துடிதுடித்துக் கொண்டிருந்தாள். அவ்வழியே வந்த அந்த கொடூர குணம் கொண்டவன் அந்தப்பெண்ணின் அருகில் வந்து நின்றான். அவள் துடிப்பதை சற்று நேரம் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு அவன் அந்த பெண்ணின் அருகில் அமர்ந்தான். தன்னுடைய கைலியை எடுத்து அந்த பெண்ணின் மீது விரித்தான். இதற்கு முன்பு வரை அவன் அவ்வாறு செய்ததே கிடையாது. இவனுக்கு இதெல்லாம் பழக்கமே கிடையாது. இருந்தபோதும், அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தான். குழந்தையை கையில் எடுத்தான். தான் கையில் எப்போதுமே வைத்திருக்கக்கூடிய கூரிய கத்தியை எடுத்து, தொப்புள் கொடியை வெட்டினான். இதற்கு முன்பு வரை இவன் அப்படி செய்ததே கிடையாது. ஆனால் அதை அன்று அவன் செய்தான். அதன் பிறகு தாய் அரை மயக்கத்தில் முனங்கிக் கொண்டிருக்கும் போது, ஓடிச்சென்று அருகிலிருந்த ஒரு குட்டையில் இருந்து தண்ணீரை கொண்டு வந்தான். அந்த தாயின் வாயில் அந்த தண்ணீரை குடிக்கக் கொடுத்தான். அவளது கை சட்டையை சற்று விலக்கி குழந்தைக்கு உணவருந்தும் வகையில் அந்த குழந்தையை அப்பெண்ணின் மார்பகம் பக்கம் வைத்தான். இக்கதையை எழுதிய வால்ட் விட்மன் என்ற ஆசிரியர், இந்த கதைக்கு  வைத்த பெயர், "ஒரு மனிதன் பிறந்தான்".

      மண்ணில் வாழுகிற ஒவ்வொரு மனிதருக்குள்ளும் நல்லதும் தீயதும் குடி கொண்டிருக்கிறது. சூழலுக்கேற்ப மனிதன் மாறுபடுகிறான். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும், நாம் வாழக்கூடிய சமூகத்தில், அனைத்து விதமான தீமைகளின் ஒட்டுமொத்த உருவமாக நாம் சித்தரிக்கக் கூடிய மனிதனுக்குள்ளும் தூய ஆவியானவர் இறங்கி செயலாற்றுகிறார். அவனுக்குள்ளும் நன்மைத்தனங்கள் இருக்கின்றன. இதனை நாம் உணர்ந்து கொள்ள நமது வாழ்வில் நன்மை தீமையை அறிந்து ஏற்றுக்கள்ள கடவுள் நமக்கு தூய ஆவியாரை தருவதாக வாக்களித்தார்.

      வாக்கு மாறாதவர் கடவுள். கடவுள் தான் சொன்னதை சொன்ன நேரத்தில் நிறைவேற்றக் கூடியவர். இவ்வுலகின் மீட்புக்காக  தன் மகனை அனுப்புவதாக வாக்களித்தார்.  அவ்வாக்கை நிறைவேற்றினார்.  இயேசுவும் இந்த மண்ணில் வாழ்ந்த போது,  ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என சொல்லிக் கொடுத்தார். தான் கற்பித்தவைகளை தன் வாழ்வாக மாற்றினார்.  தான் இறப்பேன் என்பதை முன்னறிவித்தார். இறந்த அவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுவார் என்று அறிவித்தார். தான் அறிவித்த வார்த்தைகளுக்கு ஏற்ப அனைத்தையும் செயல்படுத்தியவர் இறைவன். உயிர்த்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து எப்போதும் உங்களோடு இருக்க  ஒரு துணையாளரை தருவேன் என வாக்களித்தார். இதையே நற்செய்தி வாசகமாக வாசிக்க கேட்டோம்.  அந்த துணையாளரே தூய ஆவியானவர். 

      இந்த துணையாளர் நம்மிடம் வருகிற போது நாம் பலவிதமான, அளப்பரிய காரியங்களை முன்னெடுக்க முடியும். அதற்கு சிறந்த உதாரணமாக இன்று அமைவதே இன்றைய முதல் வாசகம். அன்று யூதர்களுக்கு அஞ்சி நடுங்கி பயந்து போய், மாடி அறைக்குள் முடங்கிப் போய் கிடந்த சீடர்கள் எல்லாம்,  தூய ஆவியாரின் வருகைக்கு பிறகாக, துணிவோடு வந்து, யாரைக் கண்டு அஞ்சி நடுங்கினார்களோ, அவர்களுக்கு மத்தியில் போய் நின்று,  ஆண்டவர் இயேசுவின் இறப்பு உயிர்ப்பைப் பற்றி எடுத்துரைத்தார்கள்.
நாசரேத்து இயேசுவைக் கொன்றவர்கள் நீங்கள் என்று சாட்சி கூறினார்கள். அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார். 
அதற்கு நாங்கள் சாட்சிகள் என்று சான்று பகரக் கூடிய மனிதர்களாக மாறினார்கள். 

          தோல்வியில் துவண்டு போய்,  நம்பிக்கை இழந்து போய்,  மூடிய அறைக்குள் முடங்கிக் கிடந்த மனிதர்களுக்கு தூய ஆவியானவர் துணிவூட்டினார்.  அந்த தூய ஆவியானவர் இன்று நம்மோடு இருக்கின்றார். நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருந்து நன்மை தீமைகளை எடுத்துரைக்கிறார். 

இந்தத் தூய ஆவியானவர்  இதயத்தில் தங்குகிறார் என்றால்,  நமது உடலாகிய ஆலயம் தூய்மையானதாக இருக்க வேண்டும்.  இந்த உடலைக் கொண்டு,  நாம் ஊனியல்புக்கு ஏற்ற வகையில் பாவ வழியில் ஈடுபடக்கூடாது என்பதை, இன்றைய இரண்டாம் வாசகம் வழியாக வலியுறுத்துகிறார். துணையாளரை அனுப்புவதாக வாக்களித்த இறைவன், தன் வாக்கிற்கு ஏற்ப துணையாளரை அனுப்பினார். 

         துணையாளரும் வந்திருக்கிறார்; நம்மோடு இருக்கிறார்; நமக்குள்ளாக இருக்கிறார். நமது ஊனியல்புக்கு ஏற்ற செயல்களால், பல நேரங்களில் நாம் அவரை உணர்ந்து கொள்ள மறுக்கிறோம். ஆனால் ஊனியல்புக்கு ஏற்ற செயல்களையெல்லாம் புறம்தள்ளி, தூய ஆவியானவரின் குரலுக்கு செவி கொடுத்து, அவர் காட்டும் பாதையில் பயணம் செய்ய இறைவனிடத்தில் அருள்வேண்டி தொடர்ந்து செபிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...