திங்கள், 27 ஜூன், 2022

நம்பிக்கையோடு தொடர...(28.6.2022)

நம்பிக்கையோடு தொடர...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
        இன்றைய முதல் வாசகத்தின் வாயிலாக இஸ்ரயேல் மக்களை கடவுள் தேர்ந்தெடுத்து தகுதி உள்ளவர்களாக மாற்றினார் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.  இஸ்ரயேல் மக்கள் தங்களுக்கான கடவுளை தேர்ந்தெடுக்கவில்லை, கடவுள் தான் அவர்களை தங்களுக்கான மக்களாக தேர்ந்தெடுத்து, அவர்களோடு உடன்படிக்கை செய்துகொண்டு, தவறுகிற போதெல்லாம் அவர்களை வழிநடத்த கூடியவராக அழைத்த மக்களை அழைப்பிற்கு தகுதி உள்ளவர்களாக மாற்றுகிறார் என்பதை முதல் வாசகம் வாயிலாக அறிகின்றோம்.

      இன்றைய நற்செய்தி வாசகத்திலும், ஆண்டவர் இயேசுவால் அழைக்கப்பட்ட சீடர்கள்,  அவரோடு உடன் இருந்தார்கள்; அவர் செய்த அனைத்து விதமான புதுமைகளையும் கண்டார்கள்; கேட்டார்கள்

            ஆனாலும் அவர்களின் உள்ளத்தில் ஆண்டவர் இயேசுவின் மீதான நம்பிக்கை என்பது தளர்வுற்ற நிலையில்தான் இருந்தது.  வாழ்வில் துன்பங்களை சந்திக்கின்ற போது இதுநாள் வரை தங்களோடு உடன் இருந்து வந்த செயல்களைச் செய்த இயேசு கிறிஸ்துவை மறந்து போனவர்களாய்,  அச்சத்திற்கு மத்தியில் ஆண்டவரை மறந்து, ஆண்டவரே!  சாகப்போகிறோமே! உமக்கு கவலை இல்லையா?  என்று கூறி இயேசுவை எழுப்பக்கூடிய செயலில் ஈடுபடுகிறார்கள். எழுந்த இயேசு அவர்களின் நம்பிக்கையின்மையை கடிந்து கொண்டு, அஞ்சாதீர் என்று கூறி, காற்றையும் கடலையும் அடக்கி, அங்கிருந்தவர்களுக்கு இயேசு நம்பிக்கையை விதைத்து செல்கிறார். 

          இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பின்பற்றுகின்ற நாமும்,  வாழ்வில் துன்ப துயரங்கள் வருகிற போதெல்லாம், 
இதற்கு முன்பு வரை நாம் வாழ்வில் சந்தித்த இன்ப துன்பங்களில் எல்லாம் நம்மை வழிநடத்தி வந்த இறைவனை மறந்து  போய்,  அச்சத்தோடும்  கலக்கத்தோடும் வாழ்வை நகர்த்துகின்ற நிலை இன்று நம்மில் தொடருகின்றது. இத்தகைய நிலை மாற வேண்டும் என்பதையே இறைவன் வலியுறுத்துகிறார்.

எல்லா அருளும் நிறைந்த கடவுள், இயேசு கிறிஸ்துவுக்குள் என்றும் நிலைக்கும் தம் மாட்சியில் பங்குகொள்ள உங்களை அழைத்திருக்கிறார். சிறிது காலத் துன்பங்களுக்குப்பின் அவர் உங்களைப் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, வலுப்படுத்தி நிலைநிறுத்துவார்.
1 பேதுரு 5:10.
 
       என்று இறைவார்த்தையின் வழியாக நம்மை உறுதிப்படுத்துகிறார். 
துன்பங்கள் வருகிற போதெல்லாம் இறைவன் உடனிருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள, அச்சத்தோடு இருந்த சீடர்களுக்கு ஆண்டவர் இயேசு வழங்கிய அதே அறிவுரையை இன்று நமக்கும் வழங்குகிறார்.  அஞ்சாது, துணிவோடு, ஆண்டவர் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்களாய் தொடர்ந்து நமது வாழ்வை நகர்த்துவோம்.  நம்பிக்கை ஒன்றே நம்மை இறைவனோடு இணைத்துச் செல்லும்.  நம்பிக்கையோடு தொடர்ந்து பயணிக்க இறைவனிடத்தில் அருள் வேண்டி இன்றைய நாளில் செபிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...