ஆண்டவருக்கு உகந்த ஒரு வாழ்க்கை வாழ....
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்..
இன்றைய நாள் வாசகங்கள் அனைத்துமே ஆண்டவருக்கு உகந்த ஒரு வாழ்க்கை வாழவும், ஆண்டவரின் பணியைச் செய்யவும் ஒரு அழைப்பை தருகின்றன. மண்ணில் பிறந்த ஒவ்வொரு மனிதனுமே கடவுளின் ஆற்றலை பெற்றிருக்கிறோம். ஒவ்வொருவருக்குள்ளும் கடவுளின் ஆவியார் குடிகொண்டிருக்கிறார். அந்த ஆவியாரின் குரலுக்கு செவி கொடுத்தவர்களாய், தூய ஆவியானவரின் தூண்டுதலுக்கு உட்பட்ட மக்களாய் நாம் ஒவ்வொருவரும் வாழ வேண்டும் என்பதை இறைவன் என்று வலியுறுத்துகிறார். இந்த ஆவியானவர் நமக்குள்ளாக இருந்து, நாம் செய்ய வேண்டிய நன்மைகளை நமக்கு எடுத்துரைக்கக் கூடியவராகவே இருந்து கொண்டிருக்கிறார்.
இன்றைய முதல் வாசகத்தில் எலியாவை பின்பற்றி, எலிசா ஆண்டவரின் பணியை முன்னெடுத்துச் சென்றது போல, மண்ணில் வாழுகிற ஒவ்வொரு மனிதனுமே தூய ஆவியின் தூண்டுதலால் இறைவனின் பணிகளை முன்னெடுக்க அழைக்கப்படுகிறோம். குருக்களாக இருந்தாலும் சரி, துறவியராக இருந்தாலும் சரி, பொது நிலையினராக இருந்தாலும் சரி, மண்ணில் படைக்கப்பட்டுள்ள நாம் ஒவ்வொருவருமே ஆண்டவரின் வார்த்தைகளை இதயத்தில் இருத்தி அதனை நமது செயலில் வெளிக்காட்டக் கூடிய மனிதர்களாக இருக்க வேண்டும் என்ற சிந்தனையினை இறைவன் இன்றைய நாளில் நமக்குத் தருகின்றார். இறைவன் தருகின்ற வாழ்வு காண பாடத்தை புரிந்து கொண்டவர்களாக, நாம் பெற்றிருக்கின்ற தூய ஆவியானவரை உணர்ந்து கொண்டவர்களாய், அந்த தூய ஆவியானவரின் தூண்டுதலின் அடிப்படையில் நாம் ஆண்டவரின் வார்த்தைகளை இதயத்தில் ஏற்று செயலில் வெளிப்படுத்தக் கூடியவர்களாக, அவரைப் பின்பற்றுகிற மனிதர்களாக வாழ்வோம். அவரை பின்பற்றுகிற போது, வாழ்வில் பலவிதமான ஏற்ற இறக்கங்களையும் தடங்கல்களையும் சந்திக்க நேரலாம். சந்தித்தாலும் அனைத்திற்கும் மத்தியிலும் இந்த ஆண்டவரை இறுகப் பற்றி பிடித்துக் கொண்டு அவரை பின்பற்றக் கூடியவர்களாக, அவரது வார்த்தைகளுக்கு செயல்வடிவம் தரக்கூடிய மனிதர்களாக வாழ இறைவனிடத்தில் அருள்வேண்டி தொடர்ந்து இன்றைய நாளில் செபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக