வியாழன், 30 ஜூன், 2022

பலியை விட இரக்கமே கடவுள் விரும்புவது....(1.7.2022)

பலியை விட இரக்கமே கடவுள் விரும்புவது....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்றைய நாள் இறைவார்த்தை வழியாக இறைவன் நமது வாழ்வை திரும்பி பார்க்க நமக்கு அழைப்பு தருகின்றார்.

              இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரேல் மக்களின் தவறான வாழ்வை ஆமோஸ் இறைவாக்கினர் சுட்டிக் காண்பித்து, மனமாற்றத்திற்கான அழைப்பினை விடுக்க கூடியவராக இருப்பதை வாசிக்க கேட்டோம். 

       இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, பாவி எனக் கருதப்பட்ட மத்தேயுவை தன் பணியை செய்வதற்காக அழைக்கின்றார். யூத சமூகத்தை பொறுத்த வரைக்கும், செய்கின்ற தவறுகளை எல்லாம் செய்து முடித்துவிட்டு, ஆண்டவருக்கு பலிப் பொருட்களை கொடுப்பதன் வாயிலாக, தங்கள் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டது என எண்ணக் கூடிய ஒரு பார்வை வளர்ந்து இருந்தது.  அந்த அடிப்படையில் தான் அவர்கள் மனிதர்களை கூட பாவிகள் எனவும், ஒதுக்கப்பட்டவர்கள் எனவும், கடவுளுக்கு அருகில் வர  தகுதியற்றவர்கள் எனக் கூறியும், பலரை பல பிரிவினைகளின் மத்தியில் பிரித்து வைத்திருந்தார்கள். 

     அப்படிப்பட்ட ஒரு நிலையில் தான் மத்தேவை அவர்கள் பாவி எனக் கருதினார்கள். காரணம் அவர் வரியை வசூலித்து உரோமை அரசிடம் கொடுக்கக்கூடிய பணியை செய்து கொண்டிருந்ததால். 

         ஆனால் இயேசு அனைவரையும் ஒன்றென கருதினார். எனவே அவர் தனது பணிக்கென எல்லோரையும் அழைத்தார்.  மத்தேயுவையும் அழைத்தார். 
பாவி என்ற பாகுபாடு தவறு என்பதையும், மனிதர்கள் இணைந்து வாழ வேண்டும் என்பதையும், அவர் கற்றுத்தருவதற்கான முயற்சியில் ஈடுபட்டார். வெறுமனே கற்பிப்பவராக அல்ல, தான் கற்பித்ததை தன் வாழ்வில் பின்பற்றக் கூடிய ஒரு மனிதராக, தனது பணிக்கென, அனைவரையும் அழைத்தார். 
       பலியை விட இரக்கத்தை விரும்புவதாக கூறிய கடவுள் நாம் மனிதர்களிடத்தில் இரக்கம் காட்டவும், நாம் தவறு செய்த மனிதர்களுக்கு எதிராக தவறை திருத்திக் கொண்டு அவரோடு உள்ள உறவை புதுப்பித்துக் கொண்டு இணைந்து வாழ்வதையே இறைவன் விரும்புகிறார். 

        நாம் உண்டியலில் செலுத்துகின்ற காசோ அல்லது நாம் செபிக்கின்ற செபமோ, இறைவனை திருப்திப்படுத்துவது இல்லை. கடவுளை திருப்திப்படுத்துவது, நமது 
செயல்களில் ஏற்படுகின்ற மாற்றம் மட்டுமே.  நாம் செய்கின்ற செயல் தவறு என உணர்கிற போது, அந்த தவறை திருத்திக் கொண்டு, நமது வாழ்வை நல்வழி நோக்கி நகர்ந்துகிறோம் என்றால், அதுவே கடவுளுக்கு உகந்த வழியாக அமைகிறது. 

           இத்தகைய வாழ்வை நாம் நமது வாழ்வாக மாற்றிக் கொண்டு, இறைவனின் பாதையில் எப்போதும் இணைந்து பயணிக்க, இறைவனிடத்தில் அருள் வேண்டி தொடர்ந்து செபிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...