திரு இருதய பெருவிழா....
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்று தாய் திரு அவையானது இயேசுவின் திரு இருதய பெருவிழாவை கொண்டாட நமக்கு அழைப்பு விடுக்கிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்மீது அளவுகடந்த அன்புகொண்டவர்.
தன் இருதயத்தில் இருந்து அன்பை மட்டுமே நமக்குத் தர வல்லவர். நம்மீது அவர் கொண்ட அன்பின் காரணமாகத் தான் நமக்காக பலவிதமான இன்னல்களுக்கு மத்தியிலும் தனது இன்னுயிரை தியாகம் செய்தவர்.
நாம் வாழ வேண்டும்; நாம் மீட்பு பெற வேண்டும் என்பதற்காக தன் உயிரை சிலுவையில் தியாகம் செய்தவர். தன் இரத்தத்தை நமக்காக சிந்தியவர். இந்த இயேசுகிறிஸ்துவின் இதயத்தை உற்றுநோக்க, அவரை குறித்து சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம்.
விவிலியத்தின் துவக்கத்திலிருந்து நாம் வாசிப்போமாயின், இஸ்ரயேல் மக்களை கடவுள் தனது அன்புக்கு உரியவராக தேர்ந்தெடுத்தார். தன் இதயத்திற்கு நெருக்கமானவர்களாக அவர்களை பாதுகாத்தார்.
இன்ப துன்பங்களில் உடன் இருந்தார். ஆனால் எல்லாச் சூழ்நிலைகளிலும் அவர்கள் கடவுளிடம் இருந்து அன்பை பெற்றுக் கொண்டாலும் பல நேரங்களில் அந்த கடவுளை புறம் தள்ளிவிட்டு கல்லான இதயம் படைத்த மனிதர்களாக தங்கள் மனம் போன போக்கில் மாறிப்போனார்கள்.
ஆனால் ஆண்டவரோ, தனது அன்பான இதயத்திலிருந்து அந்த மக்களை பாதுகாத்தார்; பராமரித்தார். அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்தார். அவர்களோடு உடனிருந்து வழிநடத்தினார். வாழ்வில் அவர்கள் ஏற்றங்களை சந்தித்த போதும், இறக்கங்களை சந்தித்த போதும், அவர்களோடு மகிழ்ந்து அவர்களோடு அழுகின்ற ஒரு கடவுளாக இருந்தார். உணர்வுகளை புரிந்து உணர்ந்து கொள்ளக்கூடிய ஒரு கடவுளாக இருந்தார், நாம் பின்பற்றுகின்ற ஆண்டவர் செயல்பட்டார் என்பதை விவிலியத்தில் இருந்து நாம் தெரிந்து கொள்கிறோம்.
அனைத்து உணர்வுகளின் பிறப்பிடமாக அமைகின்ற இந்த இதயத்தில் நாம் இயேசுவின் இதயம் போல மாற்றிட, நமது இதயத்தை மாற்றிக் கொள்ள இந்த ஆண்டவர் இயேசுவின் திருஇருதய பெருவிழா நமக்கு அழைப்பு தருகிறது.
ஆண்டவர் படைத்த இந்த அழகிய உலகத்தில், மனிதர்களாகிய நாம் நமது இதயத்தில் இருந்து அன்பையும் இரக்கத்தையும் பரிவையும் நிறைக்கக்கூடிய மனிதர்களாக இருக்க வேண்டும் என்பதே இன்றைய நாள் விழா நமக்குத் தருகின்ற வாழ்வுக்கான பாடமாக இருக்கிறது.
ஆண்டவர் படைத்த இந்த அழகிய உலகத்தில் அவரின் இருதயத்தை உற்று நோக்கிச் செபிக்கின்ற இந்த நல்ல நாளிலே, நமது இதயத்தை அவரின் இதயம் போல மாற்றிட அவரிடத்தில் அருள் கேட்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக