வெள்ளி, 17 ஜூன், 2022

செல்வமா...? இறைவனா...?(18.6.2022)

செல்வமா...? இறைவனா...?

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
 இன்றைய முதல் வாசகத்தில் யோவாசு அரசன் யாவே இறைவனை பின்பற்றிக் கொண்டிருந்த தனது போக்கை மாற்றிக் கொண்டு எடுப்பார் கைப்பிள்ளை போல பலர் கூறக்கூடிய வார்த்தைகளுக்கு ஏற்ப தனது வாழ்வை மாற்றிக் கொண்டு தனது மனம் போன போக்கில் வேற்று தெய்வ வழிபாட்டில் ஈடுபடுகின்றார். அவரின் இத்தகைய செயலை தவறு என இறைவாக்கினர்கள் எடுத்துரைக்கக்கூடிய நிகழ்வையே இன்றைய முதல் வாசகமாக நாம் வாசிக்க கேட்டோம். 

    இன்றைய நற்செய்தி வாசகமும் ஒரே நேரத்தில் ஒருவர் இரு தலைவர்களுக்கு பணிவிடை புரிய முடியாது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது. நாம் கடவுளுக்கும் செல்வத்திற்கும் இணையாக பணி செய்ய முடியாது. செல்வத்திற்கு பணிவிடை செய்யக் கூடிய நபர் அடுத்த நாளைக் குறித்த கவலையோடு தன் வாழ்வை நகர்த்திக் கொண்டே இருப்பார். ஆனால் இறைவனுக்குப் பணி செய்யக்கூடிய நபரோ அடுத்த நாளைப் பற்றிய கவலை இன்றி, கடவுள் மீதான ஆழமான நம்பிக்கை கொண்டு, அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தனது வாழ்வை நடத்திக் கொண்டிருப்பார். 

     நாம் செல்வத்தின் மீது மோகம் கொண்டவர்களாக பற்று கொண்டவர்களாக நமது வாழ்வினை நகர்த்துகிறோமா? அல்லது இறைவன் மீது ஆழமான நம்பிக்கை கொண்ட மனிதர்களாக நமது வாழ்வை நகர்த்துகிறோமா என்ற கேள்வியை இதயத்தில் எழுப்பிப் பார்க்க இன்றைய நாள் இறைவார்த்தை வழியாக நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகின்றோம்.

    இறைவன் தருகின்ற இந்த அழைப்பை உணர்ந்து கொண்டவர்களாக நாம் வாழுகின்ற இந்த காலத்தில் இறைவன் மீது மட்டுமே ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக, அவருக்கு மட்டுமே பணிவிடை செய்யக்கூடிய மனிதர்களாக வாழ இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து இன்றைய நாளில் இறைவேண்டலில் ஈடுபடுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...