ஞாயிறு, 30 ஜூன், 2024

கடவுளுக்கு உகந்தவராய் வாழ்வோம்! (1-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

 இன்றைய இறை வார்த்தையானது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வாழ்வோடு நமது வாழ்வை ஒப்பிட்டுப் பார்க்க அழைப்பு விடுகிறது. மானிட மகனுக்கு தலை சாய்க்கக் கூட இடமில்லாத சூழலில் தான் இயேசுவின் வாழ்வு இந்த அகிலத்தில் இருந்தது. ஆனால் அவர் கடவுள் மீது கொண்டிருந்த ஆழமான நம்பிக்கை அனைத்து விதமான கவலைகளையும் மறக்கடிக்க வைத்தது. கடவுளின் காரியங்களில் கருத்தோன்றியவராக ஒரு மனிதன் இந்தச் சமூகத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான மிகச் சிறந்த சான்றாக இயேசுவை நாம் நமது வாழ்வில் அடையாளம் கண்டு கொள்ள அழைக்கப்படுகிறோம். கடவுளை மட்டுமே நம்பி கடவுளின் துணையோடு கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வை ஒவ்வொருவரும் வாழ முடியும் என்பதை தன் வாழ்வால் இயேசு நமக்கு வெளிக்காட்டினார். 

   இந்த இயேசுவை நாம் மனதில் இருத்தி அவரைப்போல ஆண்டவருக்கு உகந்த காரியங்களை ஆர்வத்தோடு செய்ய இறையருள் வேண்டி இன்றைய நாளில் மன்றாடுவோம். இறைவன் நம்மைத் தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

வெள்ளி, 28 ஜூன், 2024

புனித பேதுரு பவுல் பெருவிழா! (29-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!


 இன்று தாய் திரு அவையானது திருத்தூதரான பேதுருவையும் பவுலையும் நினைவு கூர நமக்கு அழைப்பு விடுக்கிறது. திரு அவையின் இரு பெரும் தூண்களாக இவர்கள் இருவரும் கருதப்படுகிறார்கள். ஒருவர் படிப்பில் மிகச் சிறந்தவராக இருந்தார், மற்றவரோ படிப்பறிவு அற்றவராக இருந்தார். ஆனால் இவர்கள் இருவருமே இணைந்து இயேசுவின் பணியை இவ்வகிலத்தில் மூலை முடுக்கெல்லாம் கொண்டு போய் சேர்த்தார்கள். நம்பிக்கையோடு ஆண்டவரை நாடி வரவேண்டும் என்பது இவர்களின் வழிகாட்டலாக அமைந்தது.

 இந்த இரு திரு தூதர்களை நினைவு கூருகிற இந்நன்னாளில் நீங்களும் நானும், இன்று நாம் நினைவு கூறுகின்ற திருத்தூதர்களைப் போல இயேசுவின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு வாழவும், அந்த நம்பிக்கையின் அடிப்படையில் பல நல்லவர்களை இச்சமூகத்தில் உதயமாக செய்வதில் நமது பங்களிப்பை வழங்கவும் வேண்டியது நமது கடமை என்பதை உணர்ந்தவர்களாக இத்திருத்தூதர் பவுல் மற்றும் திருத்தூதர் பேதுருவின் வாழ்வில் இருந்து நமது வாழ்வுக்கான ஆழமான நம்பிக்கையை நாம் எடுத்துக் கொண்டு இறைவன் கொடுத்த இந்த அகிலத்தில் இணைந்து பயணிக்க இன்றைய நாளில் இதயத்தில் உறுதி ஏற்போம் இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

வியாழன், 27 ஜூன், 2024

நம்பிக்கையோடு நன்மைகள் செய்வோம்! (28-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

 இன்றைய இறை வார்த்தையானது ஆண்டவர் மீது அசைக்க முடியாத ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில், நம்பிக்கையோடு ஆண்டவரிடத்தில் வந்து, நீர் விரும்பினால் நான் நலம் பெற முடியும் என்று சொல்லி நம்பிக்கையோடு ஆண்டவரிடத்தில் இருந்து நலம் பெற்றுக் கொண்டு சென்ற மனிதனை குறித்து நாம் வாசிக்க கேட்டோம். இந்த மனிதரை போன்றே நீங்களும் நானும் நம்பிக்கையோடு ஆண்டவரை நாடி வந்து பல்வேறு விதமான நன்மைகளைப் பெற்றுக்கொள்ள அழைக்கப்படுகிறோம். அவர் தந்திருக்கின்ற இந்த இனிய நாளில் அவரின் துணையோடு ஆயிரக்கணக்கான இடர்பாடுகளுக்கு மத்தியிலும் நன்மைகள் செய்து நமது வாழ்வை அலங்கரித்துக் கொள்ள முடியும் என்பதை மனதில் இருத்தியவர்களாக நம்பிக்கையோடு இன்றைய நாளில் இறைவன் கொடுத்திருக்கின்ற இந்த இனிய நாளில் உறவுகள் அத்தனை பேரோடும் ஆண்டவருக்கு உகந்த ஒரு வாழ்வை நாம் நமது வாழ்வாக மாற்றிக் கொள்ளும் வண்ணமாக நம்பிக்கையோடு நல்லது செய்ய வேண்டும் என்ற மனநிலையோடு தொடர்ந்து பயணிக்க இறைவனிடத்தில் இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.


செவ்வாய், 25 ஜூன், 2024

நற்கனி கொடுக்கும் மரங்களாக வளர்வோம்! (26-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

 இன்றைய இறை வார்த்தையானது நல்ல கனி தரும் மரங்களாக இருப்பதற்கான அழைப்பை நமக்கு தருகிறது. ஆண்டவர் படைத்த இந்த அகிலத்தில் காணுகிற மனிதர்களுக்கெல்லாம் நன்மை செய்பவர்களாக நீங்களும் நானும் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள அழைக்கப்படுகிறோம். இறைவன் நமக்கு கொடுத்திருக்கின்ற
 நற்பண்புகளை நினைவு கூர்ந்து அந்த நற்பண்புகளை மற்றவரோடு பகிர்கின்ற மனிதர்களாக நீங்களும் நானும் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள, அத்தகைய வாழ்வு வழியாக ஆண்டவர் விரும்புகின்ற இறையாட்சியை மண்ணில் வளரச் செய்யக்கூடியவர்களாக நாம் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள ஆண்டவரிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

திங்கள், 24 ஜூன், 2024

பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் மற்றவர்களுக்கு செய்யுங்கள்! (25-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

 இன்றைய இறைவார்த்தையானது பிறர் நமக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறோமோ அதையே நாம் அவர்களுக்கு செய்ய வேண்டும் என்பதை நமக்கு வலியுறுத்துகிறது. நாம் காணுகிற ஒவ்வொருவருமே நமக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் நம் எல்லோர் உள்ளத்திலும் உள்ளது அதே எண்ணத்தோடு நாம் காணுகிற அத்தனை மனிதர்களுக்கும் நன்மை செய்பவர்களாக இருக்க இன்றைய இறை வார்த்தை வழியாக அழைக்கப்படுகிறோம். 

     முப்பத்து மூன்று ஆண்டுகள் இம்மண்ணில் வாழ்ந்த இயேசுவின் வாழ்வு அவர் எங்கு சென்றாலும் நன்மை செய்தார் என அவரைப் பற்றி சுட்டிக் காட்டுகிறது. இந்த இயேசுவை பின்பற்றுகின்ற நீங்களும் நானும் நமது வாழ்வில் இறைவன் கொடுத்திருக்கின்ற இந்த இனிய நாளில் நாம் காணுகிற அத்தனை மனிதர்களுக்கும் நன்மை செய்பவர்களாக நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

ஞாயிறு, 23 ஜூன், 2024

இக்குழந்தையின் பெயர் திருமுழுக்கு யோவான்! (24-6-24)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

 இன்றைய இறை வார்த்தைகள் திருமுழுக்கு யோவானின் பிறப்பை நமக்கு அறிவிக்கிறது. தாய் திரு அவையும் திருமுழுக்கு யோவானின் பிறப்பு பெருவிழாவை இன்றைய நாளில் கொண்டாடிட நமக்கு அழைப்பு விடுக்கிறது. திருமுழுக்கு யோவான் இயேசுவின் வருகையை உலகுக்கு அறிவிக்க வந்த ஒரு நபர். பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் இணைப்பு பாலமாக இருந்து, உண்மையை பின்பற்றுபவர்களாக, உண்மையை தங்கள் வாழ்வில் கடைபிடிப்பவர்களாக, ஒவ்வொருவரும் இருக்க வேண்டும் என்பதை உலகுக்கு உரக்க அறிவித்த ஒரு நபர். உண்மையை எடுத்துரைக்கின்ற இயேசு கிறிஸ்துவின் வருகையை அனைவருக்கும் அறிவித்தவராக தன் வாழ்வை அமைத்துக் கொண்டவர். 


இந்த திருமுழுக்கு யோவான் தன் வாழ்நாள் முழுவதும் ஆயிரக்கணக்கான அறப்பணிகளையும் ஆன்மீகப் பணிகளையும் முன்னெடுத்தவர்களாக, தான் வாழுகிற சமூகத்தில் இருக்கின்ற குறைகளை சுட்டிக் காண்பித்து இந்த குறைகளை களைந்து எறிந்து விட்டு கடவுளுக்கு உகந்தவர்களாக, அவரின் வருகையை ஆவலோடு எதிர் நோக்கியவர்களாக வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை உலகுக்கு உரக்க அறிவித்த ஒரு மனிதர். இவர் உண்மையை அறிவித்ததன் விளைவாக, உலகில் பின்பற்ற வேண்டிய அறப்பணிகளை பின்பற்ற வேண்டும் என்று சொன்னதன் விளைவாக ஆயிரக்கணக்கான இடர்பாடுகளை சந்தித்தார். அதிலும் குறிப்பாக அறநெறியோடு வாழ்வு வாழ வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். அது ஆண்டவருக்கு உரியது என்பதையும் சுட்டிக்காட்டினார். இதன் விளைவாக அவர் தன் உயிரையும் இழக்க நேர்ந்தது. உயிர் போகின்ற நிலைக்கு தள்ளப்பட்ட போதும் கூட, உண்மையை உரக்கச் சொல்லுபவராக, இறைவன் விரும்புகின்ற அறவழியில் ஒவ்வொருவரும் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை அறிவிப்பவராக தன் வாழ்வை அமைத்துக் கொண்டார். 

     இந்த திருமுழுக்கு யோவானை நினைவு கூருகிற இந்த நன்னாளில் நீங்களும் நானும் நமது வாழ்வில் இவரைப் போல இயேசுவுக்கு உகந்த வகையில் அறப்பணிகளையும் ஆன்மீகப் பணிகளையும் ஆற்றலோடு செய்யவும், ஆயிரக்கணக்கான தடைகளுக்கு மத்தியிலும் அறவழியில் இருந்து தவறிவர்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்ளாமல் அனுதினமும் ஆண்டவர் விரும்புகின்ற அறம் சார்ந்த செயல்களில் நிலைத்து நின்று, கடவுளுக்கு உகந்த மக்களாக நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...