இன்றைய இறைவார்த்தையானது நாம் செய்கின்ற செபத்தை குறித்து சிந்திக்க நமக்கு அழைப்பு விடுக்கிறது. நம் அத்துணை பேரும் செபம் செய்யக்கூடியவர்கள் தான். நேரம் கிடைக்கின்ற போது இறைவனோடு செபத்தில் இணைந்திருப்பவர்கள் தான். ஆனால் நமது செபம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை இன்றைய இறை வார்த்தைகள் நமக்கு சுட்டிக் காட்டுகின்றன. ஆண்டவர் முன்னிலையில் அமர்ந்து செபிக்கின்ற போது வார்த்தைகளை அடுக்குபவர்களாக நாம் இருந்து விடக்கூடாது.
உண்மையான செபம் என்பது நமது வாழ்வை மாற்ற வேண்டும். நம்மால் அது உணரப்பட வேண்டும். நமது செயல்களை சீர்தூக்கிப் பார்க்க வைக்க வேண்டும். அதன் அடிப்படையில் நமது செயல்களை சீரமைத்துக் கொண்டு ஆண்டவர் இயேசு விரும்புகின்ற மக்களாக, நமது செயல்களை அமைத்துக் கொள்ள செபம் வழி வகுத்துக் கொடுக்க வேண்டும். வெறுமண கடவுளின் முன்னிலையில் அமர்ந்து மன்றாடி விட்டு நகர்பவர்களாக நாம் இருந்து விடாமல், மன்றாடுகிற நாம் ஒவ்வொருவருமே மாற்றம் பெற்றவர்களாக, இயேசு விரும்புகின்ற பாதையில், இயேசுவை போலவே இந்த அகலத்தில் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்பவர்களாக இருக்க வேண்டும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம்.
இன்னும் குறிப்பாக இயேசு தன்னுடைய சீடர்களுக்கு செபிக்க கற்றுக் கொடுத்த போது கூட, விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே என்ற செபத்தை சொல்லிக் கொடுத்தார். இந்த செபத்தை குறித்து சிந்திக்கின்ற போதும் கூட, அது செயல்பாட்டிற்கு வழிவகுத்து கொடுக்கும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும். நீங்கள் பிறருடைய குற்றங்களை மன்னிக்க வேண்டும் என்பது அதிலிருந்து வலியுறுத்தப்படும். நாம் மற்றவருடைய குற்றங்களை மன்னிப்பது போல, எங்களுடைய குற்றங்களையும் மன்னியும் என்று சொல்லி தான் நாம் இறைவனிடத்தில் மன்றாடுகிறோம். நாம் மற்றவரை மன்னிக்காமல் நம்மை மன்னிக்க வேண்டும் எனக் கேட்பதில் அர்த்தமில்லை என்பதை இந்த செபத்தின் வாயிலாக உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம்.
செபம் என்பது நம்மால் உணரப்பட வேண்டும். நமது வாழ்வை மாற்ற வேண்டும். அப்படிப்பட்ட செப வீரர்களாக நீங்களும் நானும் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய இறைவார்த்தை வழியாக அழைக்கப்படுகின்றோம். இந்த அழைப்பை இதயத்தில் இருத்தி சிந்தித்தவர்களாக, இறைவனின் முன்னிலையில் பல மணி நேரமோ, சில மணி நேரமோ, அமர்ந்து உரையாடினாலும், அந்த உரையாடல் நமது உள்ளத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும். அந்த மாற்றத்தின் அடிப்படையில் இயேசுவுக்கு உகந்தவர்களாக நாம் வாழ வேண்டும் என இன்றைய நாளில் இதயத்தில் உறுதி ஏற்றுக்கொண்டு, அதற்கான ஆற்றலை இறைவன் நமக்கு தர வேண்டுமாய் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக