ஞாயிறு, 9 ஜூன், 2024

இயேசுவின் திரு உடல்! திரு இரத்த பெருவிழா! (2-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
 இன்று தாய்த்திரு அவையானது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழாவை கொண்டாட நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசுவின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழா என்பது கிறிஸ்தவர்கள் ஆகிய நாம் கொண்டிருக்கின்ற நம்பிக்கையை குறித்து சிந்திப்பதற்காக அழைப்பு விடுகிறது. சாதாரண வெண்ணிற அப்பத்தையும் திராட்சை இரசத்தையும் அருள் பணியாளர் வசீகர வார்த்தைகள் சொல்லி செபிக்கிற போது, அது இயேசுவின் திருவுடலாகவும் திரு இரத்தமாகவும் மாறுகிறது. இந்த நம்பிக்கையில் நிலைத்திருப்பவர்களாக, அன்று கல்வாரியில் நமக்காக தனது இன்னுயிரை தியாகம் செய்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பாடுகளை நினைவு கூரும் வண்ணமாகத்தான் ஒவ்வொரு நாளும் திருப்பலியில் நாம் நற்கருணை கொண்டாட்டத்தில் பங்கேற்றுக் கொண்டிருக்கிறோம். 
  இன்றைய நாளில் இந்த நற்கருணை குறித்து சிந்திக்க அழைக்கப்படுகின்ற நாம் அத்தனை பேரும், எந்நாளும் நான் உங்களோடு இருக்கிறேன் என்ற வார்த்தைகளின் அடிப்படையில், நம்மோடு இருப்பதற்காக இறைவன், தவிர்க்க முடியாத உணவாக, ஆன்ம உணவாக, நம் வாழ்வில் இடம் பெற்று இருக்கிறார். இந்த இறைவனோடு நேரம் செலவிட்டு நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். 

   இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ராயேல் மக்கள் மோசே வழியாக, கடவுள் கொடுத்த கட்டளைகளை இதயத்தில் இருத்தி சிந்தித்தவர்களாக, அதற்கு செயல் வடிவம் தருகிறவர்களாக தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டார்கள். கடவுளின் வார்த்தைக்கு கீழ்படிந்து வாழ்ந்தார்கள் என நாம் வாசிக்க கேட்கிறோம். 

   ஆண்டவர் இயேசுவின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழாவை கொண்டாடுகிற இந்த நன்னாளில், நீங்களும் நானும் கடவுளின் வார்த்தைகளை இதயத்தில் இருத்தி சிந்திக்கவும், நமக்காக தனது உடலையும் இரத்தத்தையும் தியாகம் செய்த இந்த இயேசுவின் தியாக மனப்பான்மையை நமது மனப்பான்மையாக மாற்றிக் கொண்டு, இணைந்து இவ்வகிலத்தில் பயணிக்க இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித பேதுரு பவுல் பெருவிழா! (29-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்று தாய் திரு அவையானது திருத்தூதரான பேதுருவையும் பவுலையும் நினைவு கூர நமக்கு அழைப்பு விட...