சனி, 22 ஜூன், 2024

நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது! (22-6-24)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
    இன்றைய இறை வார்த்தையானது நாம் இறைவனுக்கு உகந்தவர்களாக, இறைவன் மீது கொண்ட ஆழமான நம்பிக்கையின் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள நமக்கு அழைப்பு விடுக்கிறது. ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக மாற்றிக்கொள்ள முயலுகிற ஒவ்வொரு மனிதனுமே இந்த அகிலத்தில் செல்வத்தின் மீது கொண்ட நாட்டத்தின் காரணமாக பல நேரங்களில் பல நன்மைத்தனங்களில் இருந்து தடுமாற்றம் அடையக்கூடிய வகையில் நமது வாழ்வை அமைத்துக் கொள்ளுகிறோம் என்பது, நிதர்சனமான உண்மையாக இருக்கிறது. 

 ஆனால் செல்வத்தை விட கடவுளுக்கு உகந்தவர்களாகவே நமது வாழ்வை அமைத்துக் கொள்ள அழைக்கப்படுகிறோம். இவ்வார்த்தைகள் சொல்வதற்கு எளிதாக இருந்தாலும் இன்று ஆயிரக்கணக்கான ஆண்டவருக்கான பணியை செய்யக்கூட செல்வத்தின் துணை தேவை என்று நாம் எண்ணுவது உண்டு. இந்த செல்வத்தால் மட்டுமே நன்மைகளை செய்ய முடியும் என எண்ணுபவர்களாகவும் நாம் பல நேரங்களில் இருப்பது உண்டு. 
            ஆனால் இன்றைய இறைவார்த்தை செல்வத்துக்கும் கடவுளுக்கும் நாம் பணி செய்ய முடியாது. ஏதாவது ஒன்றுக்கு தான் பணி செய்ய முடியும் என்பதை வலியுறுத்துகிறது. அதிலும் குறிப்பாக செல்வத்தின் மீதான நாட்டத்தை குறைத்து விட்டு ஆண்டவர் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்திக் கொண்டு ஆண்டவர் நன்மைகள் செய்வதற்கான ஆற்றலை தருவார் என்று நம்பிக்கையோடு, இயன்ற அளவு சின்னஞ்சிறிய நன்மைகளை செய்து கொண்டே, இறைவனுக்கு உகந்தவர்களாக இறைவனுடைய பாதையில் பயணிக்க இன்றைய இறைவார்த்தை வழியாக நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம். 

   இந்த வார்த்தைகளை இன்னும் ஆழமாக சிந்திக்கிற போது அடுத்த நாளுக்கான கவலை கொண்டவர்களாகத்தான் பல நேரங்களில் நாம் இன்றைய நாளை கடந்து செல்கின்றோம். மற்றொரு நாளை குறித்து கவலை கொள்பவர்களாக அல்ல, அடுத்த நாளை நடத்திச் செல்வதற்கு ஆண்டவர் ஆற்றல் தருவார் என்ற ஆழமான நம்பிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு நேரத்தையும், ஒவ்வொரு நிமிடத்தையும் நகர்த்திச் செல்லக் கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும் என்பதை இன்றைய இறைவார்த்தை நமக்கு சுட்டிக் காட்டுகிறது. இந்த இறை வார்த்தையின் அடிப்படையில் இந்த உலகப் போக்கின்படி செல்வத்தின் மீது நாட்டத்தை அதிகரிக்காது ஆண்டவர் மீதான நம்பிக்கையில் நமது ஆற்றலையும் நமது நம்பிக்கையையும் இன்னும் ஆழப்படுத்திக் கொண்டு அந்த நம்பிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு நொடிப்பொழுதையும் கடந்து செல்ல இறைவனிடத்தில் ஆற்றல் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித பேதுரு பவுல் பெருவிழா! (29-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்று தாய் திரு அவையானது திருத்தூதரான பேதுருவையும் பவுலையும் நினைவு கூர நமக்கு அழைப்பு விட...