இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்றைய இறை வார்த்தைகள் திருமுழுக்கு யோவானின் பிறப்பை நமக்கு அறிவிக்கிறது. தாய் திரு அவையும் திருமுழுக்கு யோவானின் பிறப்பு பெருவிழாவை இன்றைய நாளில் கொண்டாடிட நமக்கு அழைப்பு விடுக்கிறது. திருமுழுக்கு யோவான் இயேசுவின் வருகையை உலகுக்கு அறிவிக்க வந்த ஒரு நபர். பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் இணைப்பு பாலமாக இருந்து, உண்மையை பின்பற்றுபவர்களாக, உண்மையை தங்கள் வாழ்வில் கடைபிடிப்பவர்களாக, ஒவ்வொருவரும் இருக்க வேண்டும் என்பதை உலகுக்கு உரக்க அறிவித்த ஒரு நபர். உண்மையை எடுத்துரைக்கின்ற இயேசு கிறிஸ்துவின் வருகையை அனைவருக்கும் அறிவித்தவராக தன் வாழ்வை அமைத்துக் கொண்டவர்.
இந்த திருமுழுக்கு யோவான் தன் வாழ்நாள் முழுவதும் ஆயிரக்கணக்கான அறப்பணிகளையும் ஆன்மீகப் பணிகளையும் முன்னெடுத்தவர்களாக, தான் வாழுகிற சமூகத்தில் இருக்கின்ற குறைகளை சுட்டிக் காண்பித்து இந்த குறைகளை களைந்து எறிந்து விட்டு கடவுளுக்கு உகந்தவர்களாக, அவரின் வருகையை ஆவலோடு எதிர் நோக்கியவர்களாக வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை உலகுக்கு உரக்க அறிவித்த ஒரு மனிதர். இவர் உண்மையை அறிவித்ததன் விளைவாக, உலகில் பின்பற்ற வேண்டிய அறப்பணிகளை பின்பற்ற வேண்டும் என்று சொன்னதன் விளைவாக ஆயிரக்கணக்கான இடர்பாடுகளை சந்தித்தார். அதிலும் குறிப்பாக அறநெறியோடு வாழ்வு வாழ வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். அது ஆண்டவருக்கு உரியது என்பதையும் சுட்டிக்காட்டினார். இதன் விளைவாக அவர் தன் உயிரையும் இழக்க நேர்ந்தது. உயிர் போகின்ற நிலைக்கு தள்ளப்பட்ட போதும் கூட, உண்மையை உரக்கச் சொல்லுபவராக, இறைவன் விரும்புகின்ற அறவழியில் ஒவ்வொருவரும் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை அறிவிப்பவராக தன் வாழ்வை அமைத்துக் கொண்டார்.
இந்த திருமுழுக்கு யோவானை நினைவு கூருகிற இந்த நன்னாளில் நீங்களும் நானும் நமது வாழ்வில் இவரைப் போல இயேசுவுக்கு உகந்த வகையில் அறப்பணிகளையும் ஆன்மீகப் பணிகளையும் ஆற்றலோடு செய்யவும், ஆயிரக்கணக்கான தடைகளுக்கு மத்தியிலும் அறவழியில் இருந்து தவறிவர்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்ளாமல் அனுதினமும் ஆண்டவர் விரும்புகின்ற அறம் சார்ந்த செயல்களில் நிலைத்து நின்று, கடவுளுக்கு உகந்த மக்களாக நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக