ஞாயிறு, 9 ஜூன், 2024

உங்களை யாராலும் தடுக்க இயலாது! (9-6-2024)




 ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

 சபைஉரையாளர் புத்தகம் அதிகாரம் 9 இறை வசனம் 10 இவ்வாறு கூறுகிறது: நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதை செய், அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும்போதே செய். இந்த வார்த்தைகளின் படி தன் வாழ்வை அமைத்துக் கொண்டவர் தான் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. தன் வாழ்நாள் முழுவதும் இந்த இயேசு கிறிஸ்து நல்லதை போதித்தார்…. அத்தனை மனிதர்களுக்கும் நல்லதை செய்தார்…. அதன் விளைவாக ஆயிரக்கணக்கான இடர்பாடுகளையும் இன்னல்களையும் அவர் சந்திக்க நேர்ந்தது, சந்தித்த போதும் மனம் தளராமல் தொடர்ந்து நன்மை செய்வதை மட்டுமே தன் வாழ்வின் இலக்கு என்பதை உணர்ந்தவராக தன் வாழ்நாள் முழுவதும் நன்மைகள் பல செய்து நாமும் நல்லவர்களாக மாறுவதற்கு தன் வாழ்வை நமக்கு வாழ்க்கை பாடம் ஆக்கினார், இந்த இயேசு கிறிஸ்து. இயேசுவைப் போலவே நீங்களும் நானும் இருக்க வேண்டும் என்பது இறைவனின் விருப்பம். அந்த விருப்பத்தின் அடிப்படையில் தான் இறைவன் உலகை படைப்பதற்கு முன்னதாக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து உருவாக்கினார்… மனிதனுக்கு தேவையான அனைத்தையும் உருவாக்கி முடித்ததற்கு பிறகாக அவர் இறுதியில் மனிதனை உருவாக்கினார்…. உருவாக்கிய அனைத்தையும் மனிதனின் ஆளுகைக்கு அவர் உட்படுத்தினார். இதையே விவிலியத்தில் தொடக்க நூல் இரண்டாம் அதிகாரம் 15 ஆம் வசனத்தில் நாம் வாசிக்கின்றோம். ஏதேன் தோட்டத்தை பண்படுத்தவும் பாதுகாக்கவும் ஆண்டவராகிய கடவுள் மனிதனை அங்கு கொண்டு வந்து குடியிருக்கச் செய்தார் என வாசிக்கின்றோம்… நமக்காக இறைவன் கொடுத்த இந்த அழகிய உலகத்தில் அவர் விரும்புகிற மனிதர்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்ளுவதற்கு பதிலாக மனிதன் தன் மனம் போன போக்கில் தன் வாழ்வை அமைத்துக் கொள்ள துவங்கினான். 
           அதன் விளைவுதான் முதல் பாவம் அகிலத்தில் அரங்கேறியது. ஆண்டவரால் விலக்கப்பட்ட மரத்தின் கனியை உண்டு விட்டு தான் செய்த தவறை ஏற்றுக் கொள்வதற்கு பதிலாக என்னை இந்த தவறு செய்ய தூண்டியது அவள் என்று சொல்லி பெண்ணை குற்றம் சாட்டினான் மனிதன். பெண்ணும் தன்னை குற்றம் செய்யத் தூண்டியது அந்தப் பாம்பு என்று சொல்லி தன் தவறை மறைத்து தன்னை நீதிமானாக்கிக் கொண்டு மற்றவரை குற்றவாளியாக மாற்றிக் கொள்ளத் துவங்கினாள். அன்று துவங்கிய இச்செயல் இன்றளவும் அகிலத்தில் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கிறது.  
 நம்முடைய வழக்கத்தில் ஒரு பழமொழி கூறுவது உண்டு. மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம் என்று… பொதுவாகவே மனிதர்கள் மற்றவர்களின் செயல்களில் குறைகளை காணுகிறார்கள். அக்குறைகளை பெரிதுபடுத்துகிறார்கள். அக்குறைகளுக்கு தீர்ப்பு வழங்கக் கூடியவர்களாக பல நேரங்களில் செயல்படுகிறார்கள். ஆனால் தங்கள் வாழ்வில் இருக்கின்ற தவறுகளை ஏற்றுக் கொள்ள மனம் இல்லாதவர்களாகத் தான் இருக்கிறார்கள். தங்கள் குறைகளை மற்றவர் சுட்டிக் காட்டுகின்ற போதும் கூட அதை ஏற்றுக்கொள்ள இயலாதவர்களாக, தவறை மறைப்பதற்கு, தவறை நியாயப்படுத்துவதற்குமான செயலில் ஈடுபடுகிறார்கள் என்பதை நாம் ஒவ்வொருவருமே அறிந்திருக்கின்றோம்…


          அன்று முதல் பெற்றோரிடம் காணப்பட்ட தவறை ஏற்றுக் கொள்ள இயலாத ஒரு நிலை இன்றளவும் இந்த அகிலத்தில் நீடித்து வருகிறது… ஆனால் நாம் நமது குறைகளை ஏற்றுக் கொள்ளவும் நம் வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு ஆண்டவர் இயேசுவின் பாதையில் பயணம் செய்யவும் அழைக்கப்படுகின்றோம். நாம் இயேசுவின் பாதையில் பயணம் செய்வது என்பது மிக எளிதான காரியம் அல்ல. ஆயிரக்கணக்கான துன்பங்களும் துயரங்களும் இந்த வாழ்வில் உண்டு. நன்மைகளை செய்த இயேசுவைக் கூட பல நேரங்களில் பலவிதமான விமர்சன வார்த்தைகளால் முடக்கிவிட பலரும் நினைத்தார்கள். இவர் பேய்களின் தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான் என்று சொன்னார்கள். இந்த இயேசு மதி மயங்கி இருக்கிறார் என்று சொன்னார்கள். இந்த இயேசுவுக்கு பேய் பிடித்து இருக்கிறது என்று சொன்னார்கள். எத்தனையோ விதமான விமர்சனங்களை தன் வாழ்வில் இயேசு எதிர்கொண்டு இருந்தாலும் தன்னுடைய வாழ்வில் தான் செய்கின்ற நன்மைத்தனங்களை ஒருபோதும் குறைத்துக் கொள்ளாத ஒரு நபராக இயேசு செயல்பட்டார். இந்த இயேசுவைப் போலத்தான் நீங்களும் நானும் இருக்க கடமைப்பட்டிருக்கிறோம். நாம் செய்கிற ஒவ்வொரு செயல்களையும் இறைவனுடைய வார்த்தைகளின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் ஒப்பிட்டுப் பார்த்து விண்ணக வாழ்வுக்கு ஏற்றதொரு வாழ்வை நமது வாழ்வாக மாற்றிக்கொண்டு ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு உகந்த பாதையில் நாம் பயணிக்க வேண்டும் என்பதை மட்டும் மனதில் இருத்தியவர்களாக நாம் தொடர்ந்து பயணிக்க வேண்டும். நாம் செய்கின்ற நன்மைத்தனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பலவிதமான விமர்சனங்கள் நமது வாழ்வில் வருகின்ற போதெல்லாம் அதை முற்றுப்புள்ளி ஆக மாற்றி விடாமல், நாம் நமது வாழ்வு ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளுக்கு ஏற்றபடி அமைந்திருக்கிற ஒரு வாழ்வா? என்பதை மட்டும் சிந்தித்தவர்களாக நமது வாழ்வில் ஆயிரக்கணக்கான நன்மைகளை ஆண்டவரின் துணையோடு அனுதினமும் செய்து கொண்டே பயணிக்க நாம் அழைக்கப்படுகின்றோம். நாம் செய்கின்ற நன்மைத்தனங்களை தடுப்பது எவராலும் இயலாது என்பதை இதயத்தில் இருத்திக் கொண்டு விமர்சனங்களையும் நிராகரிப்புகளையும் எதிர்ப்புகளையும் மனதில் ஏற்றி நன்மைத்தனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடாமல், தொடர்ந்து நன்மைகளை செய்து கொண்டே ஆண்டவர் இயேசுவின் பாதையில் அனுதினமும் பயணிப்போம். இந்த இயேசுவின் பாதையில் பயணம் செய்கிற நாம் ஒவ்வொருவருமே ஒவ்வொரு நாளும் நமது செயல்களை இயேசுவின் வார்த்தைகளோடு ஒப்பிட்டுப் பார்த்து நம் தவறுகளை சரி செய்து கொண்டு ஆண்டவர் இயேசுவின் பாதையில் அனுதினமும் பயணம் செய்து விண்ணக வாழ்வே நமது வாழ்வின் இலக்கு என்பதை உணர்ந்தவர்களாக செயல்படுவோம்.


 நினைவில் இருத்துங்கள், உங்களை யாராலும் தடுக்க இயலாது. தொடர்ந்து இயேசுவின் பாதையில் நன்மையானதை முன்னெடுத்துச் சொல்லுங்கள். இதற்கான அருளை இன்றைய நாளில் இறைவனிடத்தில் வேண்டிடுவோம்….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...