வியாழன், 18 மார்ச், 2021

புனித சூசையப்பர் ஒரு பார்வை... (19.3. 2021)

புனித சூசையப்பர் ஒரு பார்வை...

உழைத்து வாழும் உத்தமர்களே...! வணக்கம்.

இன்று நம் தாய்த்திரு அவையோடு இணைந்து மரியாவின் கணவரான புனித சூசையப்பரை நினைவு கூறுகின்றோம்.  

இந்நன்னாளில் சூசையப்பர் பற்றிய தெளிவான புரிதலை வளர்த்துக் கொள்ள... அவரைப் பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.


பெயர் : புனித யோசேப்பு அல்லது புனித சூசையப்பர் ( Saint .Joseph ).
அடையாள பெயர் : இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தை.
புனித கன்னி மரியாவின் கணவர். 
தாவீது அரசரின் வழிமரபில் தோன்றியவர். 
தொழில் :  நாசரேத்தில் வாழ்ந்து வந்த யோசேப்பு தச்சுத் தொழில் செய்து வந்தவர். 
வரலாற்றுச் செய்தி : 
தாவீது குலத்து கன்னிப் பெண்ணான மரியாவுடன் இவருக்கு திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டது . அவ்வேளையில் , மரியா தூய ஆவியின் வல்லமையால் இறைமகனைக் கருத்தாங்கும் பேறு பெற்றார் . மரியா திடீரென கருவுற்றதால் யோசேப்பு குழப்பம் அடைந்தார் , நேர்மையாளரான இவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்காமல் மறைவாக விலக்கி விட நினைத்தார் . மரியா கடவுளின் திருவுளத்தால் இறைமகனை கருத்தாங்கி இருப்பதை வானதூதர் வழியாக அறிந்த இவர் மரியாவை ஏற்றுக் கொண்டார்.
இயேசு பெத்லகேம் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த வேளையிலும், அவரைக் கோவிலில் ஒப்புக்கொடுக்க எருசலேம் சென்ற நேரத்திலும், ஏரோது அரசன் அவரைக் கொல்லத் தேடிய போதும் மரியாவையும், குழந்தை இயேசுவையும் மிகுந்த அன்புடனும் அக்கறையுடனும் யோசேப்பு பாதுகாத்தவர். 
பன்னிரண்டு வயதில் இயேசு எருசலேம் கோவிலில் தங்கிவிட்ட பொழுது, யோசேப்பு மிகுந்த கவலையுடன் தேடி அலைந்து அவரைக் கண்டுபிடித்தவர். 
தச்சுத் தொழிலில் வந்த வருமானம் மூலம் குடும்பத்தைக் காப்பாற்றியவர்.  
யோசேப்பு இயேசுவுக்கும் தச்சுத் தொழிலைக் கற்றுக்கொடுத்தவர். 
மரியாவுக்கு நல்ல கணவராகவும், 
இயேசுவுக்கு நல்ல தந்தையாகவும் யோசேப்பு விளங்கியவர். 
திருக்குடும்பத்தை சிறப்பாகத் தலைமைதாங்கி வழிநடத்தியவர். 
இயேசு தனது இறையரசுப் பணியைத் தொடங்குவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு,இயேசுவும் மரியாவும் அருகில் இருக்க யோசேப்பு  மரணம் அடைந்தார் . 

திருஅவையில் புனிதர்கள் வரிசையில், புனித கன்னி மரியாவுக்கு அடுத்ததாக புனித யோசேப்பு வணங்கப்படுகிறார். 
கிறிஸ்தவ வரலாற்றின் தொடக்க காலம் முதலே இவர் புனிதராக போற்றப்படுகிறார். 
இவர் கிறிஸ்தவர்களால் சிறப்பாக கத்தோலிக்கர் மற்றும் கிழக்கு மரபுவழித் திருச்சபையினரால் மிகவும் மதிக்கப்படுகிறார்.
புனித யோசேப்பு அகில உலகத் திருஅவையில் 
கற்பு 
கல்வி 
திருமணம் 
குடும்பங்கள் 
நல்ல மரணம் ஆகியவற்றுக்கும் . 
தொழிலாளர்களுக்கும் பாதுகாவலராக விளங்குகிறார் . 
CIC சபையின் இரண்டாவது பாதுகாவலர் புனித சூசையப்பர்.
கத்தோலிக்கத் திருஅவையில்  இவருக்கு இரண்டு விழாக்கள் சிறப்பிக்கப்படுகின்றன. அவை...
1. புனித யோசேப்பு கன்னி மரியாவின் கணவர் ( மார்ச் 19 ).
2. புனித யோசேப்பு தொழிலாளர்களின் பாதுகாவலர் ( மே 1 ).

இன்று நாம் நினைவு கூரும் புனித சூசையப்பரின் வாழ்வு நம்மையும் அவரைப் போல நேர்மையோடும், நீதியோடும், எப்போதும் இறை திட்டத்திற்கு செவி கொடுத்து வாழ அழைப்பு தருகிறது. இந்த அழைப்பை உணர்ந்து கொண்டு நாமும் புனித சூசையப்பரின் பாதை வழி இறையாட்சியின் உண்மை பணியாளர்களாக மாறுவோம். 

1 கருத்து:

  1. இறை திருவுளத்திற்கு நல்ல மனதோடு பணிந்திட இறையரசின் கருவிகளாக வாழ்ந்திட நம்மை அன்புடன் அழைக்கும் அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு நமது நன்றிகள்! புனித சூசையப்பரின் வாழ்வை மிக எளிதாக அறிந்து கொள்ள கருத்துகளை அழகாக தொகுத்து தந்த அருட்சகோதரர் அவர்களுக்கு நமது அன்பின் வாழ்த்துக்கள்! 🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇

    பதிலளிநீக்கு

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...