திங்கள், 31 மே, 2021

உடைந்தாலும் உருக் கொடுத்திடலாம்!.... (1.6.2021)

உடைந்தாலும் உருக் கொடுத்திடலாம்!

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
 கடவுள் எப்பொழுதும் உடைந்த பொருட்களை மிக அழகாக பயன்படுத்துவார். 

உடைந்த மேகங்கள் தான் மழை பொழியும்!
 உடைந்த நிலம்தான் உழும் வயலாக மாறும்!
  உடைந்த நெல் தான் விதையாகும்!

 ஆனால், எப்போதாவது உடைந்து நொறுங்கினால், நம்புங்கள்! கடவுள் உங்களை பெரிய விஷயத்திற்கு தயார்படுத்துகிறார் என்று கூறுவார்கள்.

 இன்றைய நாளில் நாம் வாசிக்கக் கேட்ட இறைவார்த்தையில் உடைபடக் கூடிய மனிதர்களை நாம் சந்திக்கிறோம். 

ஒன்று தோபித்து, கண் பார்வையோடு இருந்த நபர் திடீரென ஒரு குருவியின் எச்சம் அவர் கண்ணில் விழ, பார்வை இழந்தவராக மாறுகிறார். பார்வையுள்ள ஒரு நபர் பார்வையை இழந்து விட்டார் என்றால் அவருடைய நிலை அந்தோ பரிதாபம்! ஆனாலும் பார்வையற்ற அந்த நிலையிலும் நேர்மையோடு இருக்க எண்ணுகிறார். உடைந்துபோனவராக மாறினாலும் கூட தான் உடைபட்டதைக் குறித்து எண்ணி வருந்துவதை விட உடைபட்ட நிலையிலும் ஆண்டவருக்கு உகந்த வாழ்வு வாழவேண்டும் என எண்ணுகிறார். எனவே தான் தன் மனைவியின் உழைப்பின் பயனாக கொண்டுவந்த ஆட்டுக்குட்டியைக் கூட பார்வையற்ற நிலையில் இருந்த அவர் உண்மையிலுமே  இது உழைப்பின் பயனாக கிடைத்ததா? அல்லது வேறு ஒருவர்க்கு உரியதா? என்பதை ஆய்ந்து   அறிகின்றார். அதன் அடிப்படையில் அதனை பயன்படுத்த  முயலுகின்றார் என்பதை முதல் வாசகம் தெளிவுபடுத்தியது. 

இன்றைய நற்செய்தி வாசகத்திலும்  ஆண்டவர் இயேசுவை உடைத்துப் பார்க்க ஆசைப்பட்டார்கள்.  இயேசுவின் மீது எப்படி குற்றம் சுமத்தலாம் என்ற எண்ணத்தோடு பின் தொடர்ந்து கொண்டிருந்த பலர்,  ஒரு நாணயத்தை எடுத்து ஆண்டவர் இயேசுவை சோதிக்க முற்படுகிறார்கள். இதை சீசருக்கு செலுத்துவதா? கடவுளுக்கு செலுத்துவதா? என்ற கேள்வியை எழுப்பி, இவன் சீசருக்கு செலுத்த வேண்டியதில்லை என்று சொன்னால் அரசியல் ரீதியாக இவனை கைது செய்யலாம்! குற்றம் சுமத்தலாம்! என்ற நோக்கத்தோடு பயணம் செய்தவர்கள். அவர்களுக்கு மத்தியில் இயேசு கிறிஸ்து, தன்னை உடைப்பதற்கான முயற்சியில் பலர் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதும்,  அங்கு அவரை சுற்றி இருந்த அவர்களுடைய உள்ளங்களை  அறிந்தவராய்,  ஆண்டவர் இயேசு  கிறிஸ்து அவர்களிடம் விவேகத்தோடு பதில் கூறுகிறார்,  யாருக்கு உரியதோ அவருக்கு இதை செலுத்துங்கள் என்று! இதில் பொறிக்கப்பட்டுள்ள முத்திரை யாருடையது? என்ற கேள்வியை எழுப்பி,  அப்படியாயின் சீசருக்கு உரியதை சீசருக்கும் கடவுளுக்கு உரியதை கடவுளுக்கும் செலுத்துங்கள் என்று கூறுகிறார்.  
நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் பல நேரங்களில் இயேசுவை சோதிக்க முற்பட்டது போல பலர் நம்மை சோதிக்கலாம். அந்த சோதனைகளில் பல நேரங்களில் இயேசுவைப் போல நாமும்  விவேகத்தோடு வெளிவர முடியும்.  பல நேரங்களில் விவேகம் அற்றவர்களாக, உடைந்து போகக்கூடியவர்களாக நாம்  மாறிடவும் முடியும். உடைந்து போகின்ற போதெல்லாம் மனம் உடைந்து விடாதீர்கள்.  நீங்கள் உடைபட்டாலும் உங்கள் நம்பிக்கை உடைபடல் கூடாது.  உங்கள் உள்ளத்தில் ஆழமாக இருத்திக் கொள்ளுங்கள்! எல்லா அருளும் நிறைந்த இறைவன் நமக்கு வழி காட்டுவார்.  நமக்கு துணை நிற்பார். நம் சார்பாக செயலாற்றுவார்   என்பதை மனதில் நிறுத்துங்கள்.  ஆண்டவர் இயேசு கிறிஸ்து எப்படி விவேகத்தோடு செயல்பட்டாரோ  அவரைப் போல உடைபடக் கூடிய சூழல் உருவாகும் போதெல்லாம் விவேகத்தோடு நாம்  செயல்பட அழைக்கப்படுகின்றோம்.  ஒருவேளை நாம் பலருடைய சூழ்ச்சிகளால் உடைபட்ட நிலையை அடைந்தாலும் மனம் தளர வேண்டாம். உடைபட்ட   நிலையிலும் எப்படி தோபித்து நேர்மையாளராக இருக்க விரும்பினாரோ அத்தகைய நேர்மையாளராக நாமும் இருப்பதற்கு அழைக்கப்படுகின்றோம். இன்று நிலவக்கூடிய இந்த இக்கட்டான சூழ்நிலைகள் அனுதினமும் நம்மை உடைத்துக் கொண்டிருக்கின்றன.  நாம் கொண்டிருக்கின்ற நம்பிக்கை நாம் கொண்டிருக்கின்ற அன்புறவு,    நாம் கொண்டிருக்கக்கூடிய தோழமை என்ற அனைத்தையும் இந்த தொற்றுநோய் உடைத்துக் கொண்டு இருக்கிறது.   விவேகத்தோடு இருப்போம் இந்த நாட்களில். அதேசமயம் உள்ளம் உடைந்து போனாலும் உங்களிடம் இருக்கின்ற நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள். 

           உடைபட்ட மேகங்கள் மழையை தருவது போல, உடைப்பட்ட நிலம் உழும் வயலாக மாறுவதுபோல, உடைபட்ட நெல் மீண்டும் விதையாக மாறுவது போல, உடைபடுகின்ற நம்மை கடவுள் பலவிதமான அனுபவங்களால் தேற்றி, மீண்டும் உயர்த்துவார் என்பதை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள். அந்த இறைவன் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு உடைபடும் நேரங்களிலும் உங்கள் நம்பிக்கையை இறுகப் பிடித்துக் கொண்டு மீண்டும் எழுந்து நிற்க இறை அருளை இன்றைய நாளில் வேண்டுவோம்.

      நம்மோடு மட்டும் இதனை நிறுத்திவிடாமல் உடைபட்டு இருக்கக்கூடிய இந்த சமூகத்தில் பலவித காரணங்களால் மனமுடைந்து இருக்கக்கூடிய பலரைக் கண்டு கொள்வோம். அவர்களும் எழுந்து நிற்க நாம் நம்மாலான சின்னஞ்சிறு முயற்சிகளை அவர்களுக்கு செய்வோம். அடுத்தவருக்கு நம்பிக்கை ஊட்டுவோம். அடுத்தவரின் செயலை ஊக்கப்படுத்துவோம், பாராட்டுவோம்.  சோதிக்கும் நோக்குடன் பலர் சுற்றி வந்தாலும் அவர்களை கண்டு அஞ்சாது விவேகத்தோடு துணிவோடு எழுந்து நிற்போம். உடைபட்ட உள்ளங்களாகிய  நம்மை இறைவன் உயர்த்துவார் என்ற நம்பிக்கையோடு இன்றைய நாளில் தொடர்ந்து பயணிப்போம்.

1 கருத்து:

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...