வியாழன், 22 ஏப்ரல், 2021

இறைவன் இருப்பது எங்கே?...(23.4.2021)

இறைவன் இருப்பது எங்கே?

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒரு அழகிய கிராமம். அந்த கிராமத்திலே மிகவும் கொடூரமான ஒரு மனிதன் இருந்தான்.  உலகத்தில் சொல்லக்கூடிய அத்தனை தீய பழக்கங்களையும் கொண்டிருந்தவன். அவன் ஒரு காட்டுப் பாதையில் நடந்து கொண்டிருந்தான். அதே காட்டுப்பாதையில் எதிர்முனையில் ஒரு நிறைமாத கர்ப்பிணி பெண்ணும் நடந்து வந்தாள். நடுக் காட்டை அடைந்தபோது அவளுக்கு பேறுகால வலி வந்தது. துடிதுடித்தவளாய், என்ன செய்வது? என்று தெரியாமல் அருகில் இருந்த மரத்தின் அடியில் அமைதியின்றி நிலை தடுமாறி விழுந்தாள். பிரசவ வலி வேதனையில் துடித்துக்கொண்டிருந்தாள். யாராவது வந்து நம்மை காக்க மாட்டார்களா? என்ற நினைப்போடு வழியைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். அவள் கண்ணில் பட்டது,  இந்த சமூகத்தால் அயோக்கியன் என கருதப்பட்ட அந்த  கொடூர மனிதன் மட்டுமே. இவனையா நான் பார்க்கவேண்டும்!  இவன் எப்படி எனக்கு உதவி செய்வான் என்று அந்த பெண்ணின் மனதில் பலவிதமான எண்ணங்கள் ஒருபுறம். மறுபுறமோ வலியும் வேதனையும். துடிதுடித்துக் கொண்டிருந்தாள்.  அவ்வழியே வந்த அந்த கொடூர குணம் கொண்டவன் அந்தப்பெண்ணின் அருகில் வந்து நின்றான். அவள் துடிப்பதை சற்று நேரம் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு அவன் அந்த பெண்ணின் அருகில் அமர்ந்தான். தன்னுடைய கைலியை எடுத்து அந்த பெண்ணின் மீது விரித்தான். இதற்கு முன்பு வரை அவன் அவ்வாறு செய்ததே கிடையாது. இவனுக்கு இதெல்லாம் பழக்கமே கிடையாது. இருந்தபோதும், அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தான்.  குழந்தையை கையில் எடுத்தான். தான் கையில் எப்போதுமே வைத்திருக்கக்கூடிய கூரிய கத்தியை எடுத்து, தொப்புள் கொடியை வெட்டினான்.  இதற்கு முன்பு வரை இவன் அப்படி செய்ததே கிடையாது.  ஆனால் அதை அன்று அவன் செய்தான். அதன் பிறகு தாய் அரை மயக்கத்தில் முனங்கிக் கொண்டிருக்கும் போது, ஓடிச்சென்று அருகிலிருந்த ஒரு குட்டையில் இருந்து தண்ணீரை கொண்டு வந்தான். அந்த தாயின் வாயில் அந்த தண்ணீரை குடிக்கக் கொடுத்தான். அவளது கை சட்டையை சற்று விலக்கி குழந்தைக்கு உணவருந்தும் வகையில் அந்த குழந்தையை அப்பெண்ணின் மார்பகம் பக்கம் வைத்தான். இத்தகைய கதையை எழுதிய வால்ட் விட்மன் என்ற ஆசிரியர், இந்த கதைக்கு மனிதன் பிறந்தான் எனப் பெயரிட்டார்.

மனிதன் என்பவன் இவ்வுலகத்தில் கடவுளின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்டவன் என விவிலியம் கூறுகிறது. கண்ணால் காணக்கூடிய ஒவ்வொரு மனிதனுமே இறைவனின் சாயல், இறைவனின் உருவம்.  ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இறைவன் உறைந்திருக்கிறார்.  அவன் உலகத்தில் மிகவும் அயோக்கியன், மோசமானவன் என கருதப்பட்டாலும், அவனுக்குள்ளும் இறைவன் உறைந்திருக்கிறார்.  இவ்வுலகத்திலேயே மிகவும் புனிதமானவன் என்று சொல்லப்படக்கூடியவர்களின் உள்ளத்தில் இறைவன் உறைந்திருக்கிறார். தனக்குள் இருக்கும் இறைவனை உணர்ந்து கொள்ளும் போது மனிதன் மாமனிதனாக மாறுகிறான்.  எப்படிப்பட்ட மனிதனாக இருந்தாலும் தன்னுள் இருக்கும் இறைவனை கண்டுணர முடியும் அவ்வாறு கண்டு உணரும் போது நாம் இச்சமூகத்தில் நலமான நல்ல பணிகளை முன்னெடுத்து மனித மாண்பை முன்னிறுத்தி ஆண்டவர் இயேசுவின் சீடர்களாய் இருந்து ஒருவர் மற்றவரின் தேவைகளை சரி செய்யவும், ஒவ்வொருவருக்குள்ளும் இறைவன் உறைந்திருக்கிறார் என்ற உண்மையை உணர்ந்து கொள்ளக் கூடியவர்களாக மாறலாம்.  

இன்றைய முதல் வாசகத்தில் நாம்  பவுலின் மன மாற்றத்தை குறித்து, பவுல் அழைக்கப்படுவது குறித்தும் நாம் வாசிக்கின்றோம்.  

பல நேரங்களில் நாம் நமக்குள்ளே இறைவனை தேடுவதில்லை. இறைவனை வெளி உலகில் தேடுகிறோம். எங்கெங்கோ தேடி அலைகின்ற இறைவனை நாம் நமக்குள் தேடி கண்டு கொள்ளவே இன்றைய நாள் வாசகங்கள் அழைப்பு தருகின்றன.பவுல் தன்னுடைய வாழ்வில் இறைவனை தன்னுடைய கல்வி அறிவின் அடிப்படையிலும்,  சட்டங்களின் அடிப்படையிலும்.  புத்தகங்களின் அடிப்படையிலும் கடவுளைத் தேடினான். அவரால் கடவுளை கண்டு கொள்ள முடியவில்லை. அவர் கடவுளை தனக்குள் தேடியபோது தான் கடவுளை கண்டுகொள்ள முடிந்தது.  

இயேசுவை பற்றி அறிவிப்பவர்களை எல்லாம் கொன்று குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பயணப்பட்ட சவுல், இயேசுவின் குரலைக் கேட்டு தனக்குள்ளாக இயேசுவை தேடத் தொடங்குகிறார். அதன் விளைவு அன்று ஸ்தேவானை
கல்லெறிந்து கொல்லும் போது கல்லெறிபவர்களுக்கு சார்பாக நின்று கொண்டிருந்த சவுல்,தனக்குள் இருக்கும் இறைத்தன்மையை  கண்டுணர்ந்ததன் அடிப்படையில்  கல்லடி வாங்கி கொண்டிருந்த ஸ்தேவானோடு தன்னையும் இணைத்துக் கொள்ளக் கூடிய வாழ்வை தொடங்குகிறார். இதையே இன்றைய முதல் வாசகத்தில் நாம் தெளிவாக வாசிக்கக் கேட்டோம்.  பவுலை போலத்தான் நாமும், நமக்குள்ளாக இறைவனை கண்டுகொள்ள அழைக்கப்படுகின்றோம்.   அன்னை தெரசா அவர்கள் கூறுவார், ஒரு மனிதன் பசியால் இவ்வுலகில் இறக்கிறான் என்றால் அது கடவுள் அவனை பராமரிக்கவில்லை என்பதால் அல்ல.  உன்னையும் என்னையும் போன்றவர்கள் அவனை பராமரிக்காமல் விட்டதன் விளைவு எனக் குறிப்பிடுவார். 

 இன்று நாம் வாழக்கூடிய  உலகத்தில் நாம் பல நேரங்களில் நமக்குள் இருக்கும் இறைத்தன்மையை கண்டு கொள்வதை விட வெளியுலகில்  இறைவனைத் தேடி ஓடிக்கொண்டே இருக்கிறோம். நாம் நமக்குள்ளாக ஒரு சுய ஆய்வு செய்து பார்ப்போம். நம்மிடம் இருக்கும் இறைத்தன்மையை கண்டுகொள்வோம். எப்படி நாம் உண்ணக் கூடிய உணவானது உடலில் கலந்து விடுகிறதோ, அது போல மனித உடலுக்குள் கலந்துள்ள இறைத்தன்மையை கண்டுகொள்வோம். 
எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்.  யோவான் 6 :56 என்ற இறைவார்த்தையின் அடிப்படையில் நம்மோடு இணைந்துள்ள இறைவனை நாம்  கண்டு கொள்ளவும், அதனடிப்படையில் கண்ணால் காணும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இறைவன் உறைந்திருக்கிறார் என்ற உன்னதமான உண்மை உணர்ந்து கொள்ளவும், உணர்ந்து கொண்டதன் அடிப்படையில்  நாம் தொடர்ந்து ஒருவர் மற்றவர் நலனில் அக்கறை காட்டக்கூடிய இயேசுவின் உண்மைச் சீடர்களாக இந்த உலகத்தில் பயணம் மேற்கொள்ள இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம். 


1 கருத்து:

  1. இறைவன் என்னுள் உறைந்திருக்கிறார் என்கிற வார்த்தைகள் எவ்வளவு வலிமை வாய்ந்தவை! இறைவனின் ஆற்றல் பெற்றவர்களாக நம் பணியை நம் வாழ்வை தொடருவோம் மற்றவருடன் கரம் கோர்த்து! இன்றைய அருமையான கருத்துக்களை வழங்கிய அன்பு சகோதரர் சகாய ராஜ் அவர்களுக்கு நமது வாழ்த்துக்களும் செபங்களும்!

    பதிலளிநீக்கு

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...