திங்கள், 5 ஏப்ரல், 2021

விடுவித்து உயிர்த்தெழச் செய்தார்! (5.4.2021)

விடுவித்து உயிர்த்தெழச் செய்தார்!

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய முதல் வாசகத்தில் புனித பேதுரு இயேசுவின் உயிர்த்தெழுந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார். தந்தையாம் கடவுள் இறைமகன் இயேசு கிறிஸ்துவின் வாழ்வின் வழியாக பல்வேறு வல்ல செயல்களையும் அரும் செயல்களையும் மக்களுக்கு ஆற்றி அவர்களுக்கு வாழ்வின் வழியை  திறந்து விடுகின்றார். ஆனால் மற்றவரின் வாழ்வை கண்டு பொறுக்காத தலைமை குருக்களும் பரிசேயர்களும் தாம் மட்டுமே இவ்வுலகில் வாழ வேண்டும் என்ற நோக்கத்தோடு மற்றவரின் நல்வாழ்வை தடை செய்யும் விதமாக, இயேசுவின் பணிகளை தடை செய்யும் விதமாக, தனது அகங்காரமும் ஆணவமும் மட்டுமே தழைத்தோங்க வேண்டும் என்பதை முன்னிறுத்தியவர்களாக திருச்சட்டத்தை அறியாதவர்கள் மூலமாக ஆண்டவர் இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றார்கள். ஆனால் தந்தையாம் கடவுள் தன் மகன் இயேசுவை உயிர்த்தெழச் செய்து தலைமைக் குருக்களாலும் பரிசேயர்களாலும் அடைக்கப்பட்ட வாழ்வின் வழியை ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பின் மூலம் மீண்டும் திறந்து விடுகின்றார். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் உயிர்த்த ஆண்டவர் இயேசு மகதலா மரியாவுக்கும் அவருடன் இருந்த பெண்களுக்கும் காட்சி தருகின்றார். இயேசுவின் சீடர்களை கலிலேயாவை நோக்கிச் செல்லுமாறு அப்பெண்கள் வழியாக கூறுகின்றார். இயேசுவின் கல்லறை தோட்டத்தில் காவல் காத்துக் கொண்டிருந்த காவலர்கள் அவர் அங்கே இல்லாததைக் கண்டு தலைமை குருக்களிடம் வந்து அறிவிக்கின்றார்கள். நன்மையை விரும்பாத தலைமை குருக்கள் காவலர்களுக்கு மிகுதியான பணத்தை கொடுத்து இயேசுவின் உடலை தூக்கிச் சென்று விட்டார்கள் என்று கூறச் சொல்கிறார்கள். பணத்தால் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பை மறைத்துவிட எண்ணுகிறார்கள்.

               பணம் பாதாளம் வரை பாயும் என்று
பழமொழி ஒன்று கூறுவார்கள். அன்று தலைமை குருக்களிடம் இருந்த பணம் கல்லறையின் காவல் வீரர்கள் வரை பாய்ந்தது. இன்றும் கூட நம் அரசியல் தலைவர்கள் தங்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று பணம் கொடுத்து ஓட்டுக் கேட்டு வந்திருக்கலாம். அவ்வாறே பணமும் கொடுத்து இருக்கலாம். பொதுவாக இவ்வுலகில் எவ்வளவு உழைக்கிறார்களோ அவ்வளவுக்கு ஊதியம் பெறுகிறார்கள் என்பது மரபு. ஆனால் இத்தேர்தல் காலகட்டத்தில் பணத்தை கொடுத்து உண்மையையே விலைக்கு வாங்க முயற்சி செய்கிறார்கள். இச்சூழலில் பணத்தைப் பெற்றுக் கொண்டால் அந்த பணத்திற்கு ஊழியம் செய்ய வேண்டுமா அல்லது உண்மைக்கு ஊழியம் செய்ய வேண்டுமா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டிய நேரம் இது. பணமா? உண்மையா? என்று சிந்திக்கின்ற பொழுது நம்முடைய வாக்கை செலுத்த வேண்டியது நமது உரிமையும் கடமையும் ஆகும் என்பதை உணர்வோம். நமது வாக்கை நமது மனசாட்சியின்படி யார் சரி என நமது உள்ளத்தில் தோன்றுகிறதோ அவருக்கு செலுத்தலாம். பணத்தைப் பெற்று விட்டோம் என்ற காரணத்தினால் மட்டுமே நான் பணத்தை பெற்றுக் கொண்டவர்களுக்கு வாக்கு செலுத்த வேண்டும் என்பது அல்ல. ஜனநாயகம் தழைக்க, மக்கள் அனைவரின் வாழ்வு சிறக்க, எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புற்று வாழ, நமது வாக்குகளை நேர்மையாக செலுத்த கடமைப் பட்டிருக்கிறோம். அன்று பணத்தை பெற்றுக் கொண்ட படை வீரர்கள் பணத்திற்கு ஊழியம் செய்தார்கள். இன்று நாம் என்ன செய்யப் போகிறோம்? பல நேரங்களில் தீமை செய்வதற்காக பலர் நமக்கு பணத்தை தந்தாலும் நாம் பணத்தை கொண்டு எத்தகைய நல்ல காரியங்களை செய்யவிருக்கிறோம் என்று சிந்திப்போம். உணவும் உடையும் அற்றவர்களை இவ்வேளையில் நம் கண்முன் கொள்வோம். அவர்கள் வாழ்வு பெற பணத்தின் வழியாகவோ அல்லது பொருள்கள் வழங்குவதின் வழியாகவோ நாம் உதவி செய்வோம். பணத்தைப் பெற்றுக்கொண்டு பணத்திற்கு ஊழியம் செய்த படை வீரர்களைப் போல அல்லாமல், உண்மைக்கு ஊழியம் செய்ய உள்ளத்தில் உறுதி கொள்வோம். 

ஆண்டவர் இயேசுவை கண்டு கொண்ட மகதலா மரியா அவருக்கு சான்று பகர்ந்தார். நமது கண்முன் நிற்கும் பணத்திற்கு சான்று பகருவதை விடுத்து மகதலா மரியாவைப் போல உண்மைக்கு சான்று பகர நம்மையே ஒப்புக் கொடுப்போம். ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு நமது வாழ்வில் மட்டுமல்ல நமது தேசத்திற்கும் புதிய விடியலை கொடுக்கட்டும்.

1 கருத்து:

  1. ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பின் வழியில் உண்மையை நோக்கி பயணிப்போம் என்று நம்மை உற்சாகத்தோடு அழைக்கும் அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு நமது நன்றிகள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...