சனி, 4 செப்டம்பர், 2021

நமது பார்வையும் இயேசுவின் பார்வையும் ஒன்றுதானா?(05.9.2021)

நமது பார்வையும் இயேசுவின் பார்வையும் ஒன்றுதானா?

 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நாம் ஒருவர் ஒருவர் மீது அக்கறை காட்டுவதால் விளையும் நன்மை குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செப்டம்பர் மாதம் மூன்றாம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தனது டுவிட்டர் வலைப்பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றை வெளியிட்டார் அதில் அவர் கூறியதாவது:

நாம் வலு பெற்றவர்கள் மற்றும் ஒருவர் ஒருவரோடு தொடர்பு கொண்டுள்ளவர்கள் என்பதை பெரும் தொற்று மிக அதிகமாகவே நமக்கு உணர்த்தியுள்ளது. படைப்பின் மீதும், வரியவர், புறக்கணிக்கப்பட்டு பெரும் தொற்றினால் மிகவும் பாதிக்கப்பட்டோர் போன்ற எல்லார் மீதும் நாம் அக்கறை காட்டாவிட்டால் உலகை நம்மால் குணப்படுத்த முடியாது என்ற சொற்கள் அவரது ட்விட்டர் செய்தியில் இடம் பெற்றிருந்தன.

 ஒரு பழைய அருங்காட்சியகத்தில் பொருட்களெல்லாம் ஏலம் விடப்பட்டன. எல்லா பொருட்களையும் ஏலத்தில் பலர் போட்டி போட்டு எடுத்துக் கொண்டிருந்தனர்.  ஆனால் ஒரு தூசி படிந்த வீணை மட்டும் விலை போகாமல் இருந்தது.  அதனை ஒருவர் எடுத்து துடைத்து அதன் கம்பிகளை முறுக்கி அதிலிருந்து இனிமையான இசையை  மீட்டினார்.  இசையைக் கேட்டதும் அனைவரின் கவனமும் அங்கே திரும்பியது.  அனைவரும் அதனை போட்டி போட்டு ஏலம் கேட்டனர். இதே வீணை தான் அதே இடத்தில் இருந்தது.  ஆனால், பலரின் கண்கள் அதன் மீது பதியவில்லை.  அதிலிருந்து அழகிய ஒலி எழுப்பப்படும் பொழுது அனைவரின் கண்களும் அதை நோக்கி திரும்பின.  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த இயேசு கிறிஸ்துவின் மீது அனைவரின் கண்களும் திரும்பியதற்கு அடிப்படை காரணம்,  அவரிடம் இருந்த மனித நேயத்தன்மை தான்.  ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் ஏழை-  பணக்காரன், படித்தவன்- படிக்காதவன், அதிகாரம் கொண்டவன் - அதிகாரமற்றவன்,  நோயாளி- உடல் சுகம் கொண்ட நல்ல மனிதன் என ஒவ்வொருவரையும் பிரித்துப் பார்க்கவில்லை. அனைவரையும் சமமெனக் கருதினார்.  அனைவரையும் ஒன்றாக கருதினார். அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்பதை வெளிக்காட்டும் விதமாக அவருடைய செயல்கள் அனைத்தும் அனைவருக்கும் ஆனதாக இருந்தது.

 இயேசுவின் மீது குற்றம் சாட்டி அவரை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என எண்ணியவர்களுக்காகவும் அவர் பரிந்து பேசினார். இயேசுவை குற்றவாளி என தீர்ப்பிட்டு, கொடூரமாக தண்டித்து, சித்திரவதை செய்தவர்களுக்காகவும் அவர் இறைவனிடத்தில் மன்றாடினார்.  சமூகத்தில் தொட மறுத்த தொழு நோயாளர்களையும் தேடிச்சென்று தொட்டு குணப்படுத்தினார்.  இயேசு தன் வாழ்வில் அனைவர் மீதும் தன் கண்களை  பதிய வைத்தார்.  எனவேதான் அனைவரின் கண்களும் அவர் மீது பதிந்தன.  யார் இந்த இயேசு?  எப்படி இவர் இத்தகைய மனிதராக இருக்கின்றார்?  என்ற எண்ணம் கொண்டவராக ஒவ்வொருவரும் அவரை பின்பற்றக் கூடியவர்களாக மாறினார்கள்.  இன்று நாமும் ஆண்டவர் இயேசுவை பின்பற்றுகிறோம் என்றால்,  அவரிடம் காணப்பட்ட மனித நேயச்செயல்கள் நமது வாழ்விலும் வெளிப்பட வேண்டும் என்பதற்காகவும் நாம் விரும்புகின்ற, நாம் நம்புகின்ற,  அனைத்து விதமான நல்ல குணங்களின் தொகுப்பாக, முன்மாதிரியான வாழ்வாக, இந்த இயேசுவின் வாழ்வு இருந்தது என்பதும் தான்,  அடிப்படை காரணமாக இருக்கின்றது.  இந்த இயேசுவை பின்தொடர்ந்து செல்லக்கூடிய நாம் எப்போதும்,   அனைவர் மீதும் ஒரே மாதிரியான மனநிலை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்ற செய்தி இன்றைய  வாசகங்கள் வழியாக நமக்கு தரப்படுகின்றது.  இன்றைய இரண்டாம் வாசகம் இதனை அழகாக எடுத்துரைக்கிறது.  சமூகத்தில் உயர்ந்தவர்  சமூகத்தில் தாழ்ந்தவர் எனக் கருதப்படக் கூடிய இருவரும் ஒரு இடத்திற்கு வருகிறார்கள் என்றால், நீங்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதை இன்றைய இரண்டாம் வாசகம் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

      அதுபோலவே இன்றைய முதல் வாசகமும் கடவுளின் வருகையின்போது பார்வையற்ற கண்கள் பார்க்கும், காது கேளாதோரின் செவிகள் கேட்கும், கால் ஊனமுற்றோர் துள்ளிக் குதிப்பர்.   வாய் பேசாதோர் மகிழ்ந்து பாடுவர் என்ற எசாயா இறைவாக்கினரின் முன்னறிவிப்புகள் அனைத்துமே, இன்றைய நற்செய்தி வாசகத்தில் நிறைவேறுவதை நாம் காணமுடிகிறது.  பேச்சிழந்த ஒருவருக்கு இயேசு, பேசும் திறனை கொடுக்கக் கூடிய நிகழ்வினை இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க கேட்டோம்.  இயேசுவின் செயல்பாடுகளை கண்ட ஒவ்வொருவரும் அவர் மீது தங்கள் பார்வையைப் பதிய வைத்தார்கள்.  இயேசுவின் பார்வை சமநிலை கொண்டதாக அனைவர் மீதும் விழுந்ததன் அடிப்படையில் அனைவரின் கண்களும் அவரை உற்று நோக்கத் தொடங்கின.  எனவே தான் எத்துணை நன்றாக யாவற்றையும் இவர் செய்து வருகிறார் என அனைவரும் பேசக் கூடிய சூழல் அங்கு உருவானது.


வியட்நாம் நாட்டில் covid-19 பெருந் தொடரின் நான்காவது அலையின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் இவ்வாண்டின் கோடையில் அந்நாட்டில் எழுபத்தி எட்டு திருத்தொண்டர்கள் அருள் பணியாளர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் மற்றும் ஏறத்தாழ 250 இருபால் துறவியர்கள் எண்ணங்களை எடுத்துள்ளனர் இந்த இறை அழைத்தல் வியட்நாம் திருஅவைக்கு நற்செய்தியாகும் நம்பிக்கையின் அடையாளமாக உள்ளது ...

 இன்றும் அந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பலரும்  பின்பற்றிக் கொண்டிருக்கிறோம் என்றால் அவருடைய செயல்களும் அவருடைய சொல்லும் இணைந்திருந்தது. அவர் சொன்னது அனைத்தையும் தன் செயல்களில் வெளிக்காட்டினார்.  ஏதோ சொல்லிவிட்டு நகர்ந்து செல்லக்கூடிய மனிதனாக அல்ல. சொல்லக் கூடிய ஒவ்வொன்றையும் தன் வாழ்வில் வழிகாட்டக்கூடிய மனிதனாக, தான் வாழ்ந்து காட்டக்கூடிய ஒரு முன்மாதிரியான வாழ்வை அவர் வாழ்ந்து காண்பித்தார். 

        எனவே தான் அனைவரும் அவரை பின்பற்றக் கூடியவர்களாக அவர்மீது கண்களைப் பதிய வைக்க கூடியவராக மாறினார்கள். 

       இன்று  நாம் வாழுகின்ற இன்றைய சூழலில்  கண்ணுக்கு தெரியாத ஒரு வைரஸின் தாக்கம்,  இரண்டு வருடங்களுக்கு மேலாக நம்மை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.  எப்போது இந்நிலை மாறும் எனத் தெரியாத  வண்ணமாய் இருக்கிறது. அரசும் பல்வேறு முயற்சிகளை எடுத்து நோயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தாலும், தனது வீரியத்தை மாற்றிக்கொண்டு பாதிப்புகளை அதிகம் ஆக்குவதற்கான முயற்சிகளைத் தான் இந்த வைரஸானது,  செய்து கொண்டிருக்கிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் நமது பார்வையை குறித்து சிந்திக்க அழைக்கப்படுகிறோம். 
  நமது பார்வை இயேசுவின் பார்வை போலத்தான் இருக்கிறதா? கேள்வியை நாம் நமக்குள்ளாக எழுப்பிப் பார்ப்போம். இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது,  அனைவர் மீதும் தன் கண்களை பதிய வைத்தார். ஆனால் இன்று நமது பார்வை, குறுகிய பார்வையாக அமைந்துள்ளது.  பாரதிதாசன் கூறுவது போல, தன் பெண்டு, தன் பிள்ளை, சோறு, வீடு, சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டு என வாழ்வோன் கடுகுள்ளம் கொண்டோன் என்று கூறக்கூடிய வார்த்தைகளுக்கு ஏற்ற வகையில்,  நான், எனது குடும்பம், எனது பிள்ளைகள், என்னுடைய உறவினர்கள்,  என்னுடைய மதத்தைச் சார்ந்தவர்கள், எனது இனத்தைச் சார்ந்தவர்கள் என்று ஒரு குறுகிய வட்டத்துக்குள் நாம் தொடரும் நிலை உருவாகி வருகிறது. 

 ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளாக நம்மை சுருக்கிக்  கொண்டு வாழும் சூழல் தான் இன்று இயல்பாக இங்கு நிலவிக் கொண்டிருக்கிறது.  நமது பார்வைகள் இயேசுவின் பார்வைகளாக மாறும் பொழுது,  இயேசுவின் மீது எப்படி அனைவரின் பார்வையும் பதிகிறதோ,  அதுபோல நம் மீதும்  பதிகின்ற சூழல் உருவாகும். நாம் இயேசுவாக மாறிடவும் இயேசுவாக இச்சமூகத்தில் வாழ்ந்திடவும் அழைக்கப்படுகின்றோம். நாம் எப்படி வாழவேண்டும் என்பதற்கான முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டியவர்,  அந்த இயேசு. இந்த இயேசுவை, பின்பற்றுகின்ற நாமும் நமது பார்வையை குறுகிய பார்வையாக வைத்துக்
கொள்ளாது,  இந்த சமூகத்தில் பரந்துபட்ட பார்வையாக்கி,  அனைவரும் ஆண்டவரின் பிள்ளைகள், கடவுளின் பிள்ளைகள் நாம் என்பதை உணர்ந்து கொண்டவர்களாய்,   ஒவ்வொருவரையும் சகோதர சகோதரிகளாக எண்ணி, உறவுகளாக,  சாதி மத இன மொழி வேறுபாடுகளைக் கடந்து,  அனைவருக்குமான பணியினை ஆற்றிட முயலுவோம்.  அப்போது இறைவன் இயேசுவும் நம்மைக் குறித்து மகிழக் கூடிய சூழல் உருவாகும்.  ஆண்டவர் இயேசுவும் நம்மை குறித்து மகிழுவதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். பெயர் அளவில் அவரை பின்பற்றுகிறோம் எனச் சொல்லிவிட்டு,  செயலில் காட்டாதவர்களாக இல்லாது, ஆண்டவர் இயேசுவைப் போல, சொல்லும் செயலும் இணைந்து போகக்கூடிய ஒரு வாழ்வை, நாம் வாழ்ந்திட இறை அருளை வேண்டி இணைந்து இந்த திருப்பலி வழியாக செபிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...