வானதூதர்களைப் போல வாழ்வு....
இன்று நம் தாய் திருஅவையானது அதிதூதர்களான மைக்கேல், கபிரியேல், ரபேல் ஆகியோரின் திருநாளை நினைவு கூறுகிறது.
வானதூதர்கள் என்றால் கடவுளுக்கு அருகில் இருப்பவர்கள்.எப்போதும் நம்மை பாதுகாப்பவர்கள். கடவுளின் செய்தியை தாங்கி செல்பவர்கள் இந்த சிறப்பு மிகுந்த மூன்று வானதூதர்கள் பற்றி சிந்திக்க இன்றைய நாளில் நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகின்றோம்.
கபிரியேல் வானதூதர்
கடவுளிடமிருந்து நல்ல செய்தியைக் கொண்டு வருபவராக இவர் பார்க்கப்படுகிறார். அன்னை மரியாளுக்கு இயேசுவின் பிறப்பைப் அறிவித்தவர் இவர்தான். யோவானின் பிறப்பைப் பற்றி முன்னறிவித்தல் செய்ததும் இவர் வழியாகவே.
இயலாத காரியம் என்று உலகம் கருதப் அவற்றை கடவுளின் ஆற்றலால் ஆகும் என பறைசற்றுவது இவரது பணியாக பார்க்கப்படுகிறது.
புனித மைக்கேல்
கடவுளுக்கு நிகர் யார்? என்ற அர்த்தத்தில் தீய ஆவியின் பிடிகளில் இருந்தும், சாத்தானின் அழுத்தத்தில் இருந்தும் நம்மை காக்க இறைவனால் படைக்கப்பட்ட வானதூதர் இவர். அமைதி தூதர் என்ற என்ற பார்வையும் நிலவுகிறது.
தூய ரபேல்
குணமாக்கும் கடவுளின் வல்லமை தூய ரபேல் வானதூதர் வழியாக வெளிப்படுகிறது. ஒரு இளைஞர் வடிவிலாக தூதரை அனுப்பி தோபித்துக்கும் அவரின் மருமகள் சாராவிற்கும் உடல்நலன் அருள்கிறார் ஆண்டவர்.
இந்த மூன்று வானதூதர்களுமே இன்றைய நாளில் நமக்குத் தருகின்ற பாடம் என்னவென்று சந்திக்கின்ற போது இவர்கள் மூவருமே இறைவனுக்கு சாட்சிகளாக, இறைவனது வார்த்தைகளை தாங்கி வருபவர்களாக, வார்த்தைகளுக்கு சான்று பகர்கின்றவர்களாக இருக்கின்றார்கள். இந்த மூன்று வானதூதர்களைப் போலவே, நாமும் நமது வாழ்வில் இறை வார்த்தைக்கு சான்று பகர கூடியவர்களாகவும், ஒருவர் மற்றவர் நலனில் அக்கறை காட்ட கூடியவர்களாகவும், ஒருவர் மற்றவரை பாதுகாக்கவும், பராமரிக்கவும் கடமைப் பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற பாடத்தை இன்றைய நாள் வாசகங்கள் வழியாக உணர்ந்து கொள்ள நமக்கு அழைப்பு தரப்படுகின்றது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் வார்த்தைகளை கண்டு நத்தானியல் இயேசுவின் மீது அதீத நம்பிக்கை கொண்டு அவரை ரபி என்று அழைக்கின்றார். ஆண்டவரின் வார்த்தைகள் ஐயங்களை நீக்கி, அச்சங்களை தவிர்த்து, ஆற்றலை தரவல்லது இதற்கு உதாரணமாக தான் இன்றைய நாளில் நாம் நினைவு கூறுகின்ற வானதூதர்கள் புனித மிக்கேல், கபிரியேல், ரபேல் ஆகியோர் விளங்குகின்றார்கள். இவர்களைப் போல நாமும் இறைவார்த்தை சான்று பகர கூடியவர்களாக, இறைவனது வார்த்தைகளை தாங்கி செல்பவர்களாக, இச்சமூகத்தில் வலம் வரவும், இறைவார்த்தையின் அடிப்படையில் பல நல்ல உள்ளங்களை இறைவன்பால் கொண்டு வரவும் இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக