திங்கள், 27 செப்டம்பர், 2021

ஏற்பும் நிராகரிப்பும்....(28.9.2021)

ஏற்பும் நிராகரிப்பும்....


அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
40 வீடுகளைக் கொண்ட ஒரு அழகிய கிராமம் அந்த கிராமத்தில் உள்ள அனைவருமே வறுமையில் வாடுபவர்கள் எனச் சொல்ல முடியாது. ஆனால் சமூகத்தால் அவர்கள் அனைவரும் ஏழைகள் என சித்தரிக்கப்பட்டு இருந்தனர்.
தாண்டவமாடிய தானே புயலால் இவர்களது கிராமத்தில் சில வீடுகள் பாதிக்கப்பட்டன. ஆனால் ஒட்டுமொத்த கிராம வாசிகளும் பாதிக்கப்பட்டார்கள் என  அரசு அறிவித்தது நலத்திட்ட உதவிகளை செய்தது. ஆனால் அங்கு பணியாற்றிய பங்கு பணியாளர் பாதிக்கப்பட்ட வீடுகளை மட்டும் கணக்கிட்டு அந்த வீடுகளுக்கு பொருளாதார உதவி செய்வதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால் ஊரில் உள்ளவர்கள் அனைவரும் உதவி எங்கள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். எங்களில் ஒரு சிலருக்கு மட்டும் என்பதை எங்களால் ஏற்க இயலாது எனக் கூறி ஊரிலிருந்து யாரும் சென்று அந்த உதவியை வாங்கக் கூடாது என பாதிக்கப்பட்டவர்களையும் வாங்க விடாது தடுத்துக் கொண்டிருந்தனர். நிலைமையை அறிந்த போது அங்கு சமரசத்தை உருவாக்கும் முயற்சியில் சில வழிமுறைகளை பரிந்துரைத்த போதும், எதையும் அவர்கள் ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை. எங்கள் ஊரில் உள்ள அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும். இல்லை என்றால் யாருக்கும் செய்ய வேண்டியது இல்லை என்று கூறி தங்களுடைய வாதத்தை தொடர்ந்து கொண்டே இருந்தார்கள். இறுதியில் பங்கு பணியாளர் வேறு ஒரு பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்திற்கு அந்த உதவிகளை செய்வதாக தனது முடிவை மாற்றிக் கொண்டார.
மண்ணில் பிறந்த மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவருமே நமது துயரத்தை போலவே அடுத்தவர் வாழ்விலும் துயரமானது அரங்கேறிக் கொண்டிருக்கிறது. தன் குறையை போக்க, தன் துயரத்தை நீக்க பலர் உதவி செய்ய வேண்டும் என எண்ணுவது போல, அடுத்தவரின் துயரத்தை நீக்க  உதவி செய்ய வேண்டுமென எண்ணுவதற்கு பதிலாக, எனக்கு உதவாதவர்கள் யாருக்கும் உதவக்கூடாது என்ற எண்ணத்தில்  பயணம் செய்து கொண்டிருக்கிறரர்கள்.

 இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் உங்களோடு இருக்கிறார் எனவே  நாங்களும் உங்களோடு வருகிறோம். அந்த ஆண்டவரை புகழ்ந்து, போற்றி, வழிபடுகிறோம் என்று கூறி மக்கள் ஒன்றிணைந்தனர். ஆனால் இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு உயிர்த்த பிறகு எருசலேமுக்குச் செல்கிறார். எனவே சீடர்களை முன்கூட்டியே அங்கு செல்ல அவர் அறிவுறுத்திய போது இயேசுவின் வார்த்தைகளை கேட்டு எருசலேம் நோக்கி சென்று கொண்டிருந்த சீடர்கள் சமாரியா பகுதி வழியாகச் சென்றார்கள். 

சமாரியா பகுதி என்பது சமூகத்தால் தாழ்த்தப்பட்ட மக்கள் இருக்கக்கூடிய பகுதியாக பார்க்கப்பட்டது.  இன்று நிலவுகின்ற சாதிய தீண்டாமைக்கு வேராக இருந்தது தான்  யூதர் - சமாரியர் பிரச்சனைகள்...

யூதர்கள் சமாரியரை ஏற்றுக்கொள்வதில்லை. யூதர்கள் தங்களை புனிதர்கள் எனவும், சமாரியர்கள் தீட்டானவர்கள்  எனவும் கருதினர். எருசலேம் தேவாலயத்திற்கு செல்வதற்கு சமாரியா வழியாகச் சென்றால் எளிதில் சென்று விடலாம். ஆனால் தீட்டான மக்கள் இருக்கின்ற பகுதி எனக்கூறி அந்த மக்கள் இருக்கின்ற பகுதி வழியாக செல்லாமல் யோர்தான் ஆற்றை கடந்து பல மைல் தூரம் பயணம் செய்து எருசலேம் ஆலயத்தை சென்றடைய கூடியவர்களாக தான் யூதர்கள் இருந்தார்கள். யூதர்கள் தங்களை உயர்ந்தவர்களாகக்  கருதினார்கள்.

இந்த சமாரியர்கள் இறைவனின் மக்கள்,  இறைவனால் படைக்கப்பட்டவர்கள், இறைவனின் பிள்ளைகள் என்பதை உணர்த்தும் வண்ணமாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து யூதர்கள் செல்ல தயங்கிய சமாரியா பகுதிக்குச் சென்று அவர்களோடு அமர்ந்து, அவர்களோடு உரையாடி அவர்களுக்கு இறைவார்த்தை வழியாக வழிகாட்டியவர். பல வல்ல செயல்களை அவர்களிடத்தில் நிகழ்த்திக் காட்டியவர். இந்த இயேசு கிறிஸ்து உயிர்த்து விண்ணேற்றம் அடைவதற்கு முன்பாக எருசலேமுக்கு செல்கிறார். எனவே அவரை அங்கு சென்று காண்பதற்காக பயணப்பட்டுக் கொண்டிருந்த சீடர்கள் சமாரியா பகுதிக்கு வந்தபோது நீங்கள் எருசலேமுக்குச் செல்ல இருக்கிறீர்கள். எனவே உங்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனக் கூறி அவர்களை உதாசீனப் படுத்த கூடிய பணியில் ஈடுபட்டார்கள்.

 இந்த சமூகத்தில் துன்புற கூடிய மக்களின் சார்பாக நிற்கின்ற போது நாம் யாருக்காக நிற்கின்றோமோ அவர்களே நமக்கு எதிராக இருக்கக் கூடிய சூழ்நிலை இன்று எதார்த்தமாக உள்ளது. இந்தச் சூழ்நிலையில் நாம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை தான் இறைவன் இன்றைய நாளில் வாசகங்கள் வழியாக நமக்கு உணர்த்துகிறார்.

சமாரியர்கள் தங்களை ஏற்றுக்கள்ளவில்லை என்று எண்ணியதும். இவர்களை தீயினால் அழித்து விடுமாறு இறைவனிடத்தில் சீடர்கள் மன்றாடியபோது கடவுள் அவர்களை அடுத்த பணியை செய்வதற்கு செல்லுங்கள் என்று கூறி அவர்களை அங்கிருந்து அனுப்பினார்.

 கடவுள் நினைத்திருந்தால் இந்த மக்களுக்காகவும் தானே நான் என் உயிரைத் தியாகம் செய்தேன். இவர்களையும் கடவுளின் பிள்ளைகள் என அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றுதானே கற்பித்தேன். இவர்களோடு ஒருவராக தானே நான் என்னையும் இணைத்துக் கொண்டேன். ஏன் இவர்கள் என் பெயரால் வருபவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை? என்று கூறி அவர்கள் மீது கோபம் கொள்ளக் கூடியவராக இருந்திருக்கலாம். ஆனால் இறைவன் அப்படியல்ல, ஏற்றுக்கொண்டாலும் நிராகரித்தாலும் நலமான நல்ல பணிகளை, சமத்துவமான சமூக நீதிக்கான பணிகளை இம்மண்ணில் விதைத்துக் கொண்டே செல்ல வேண்டும் என இயேசு தன் சீடர்களுக்கு கற்பித்தார். அதே பாடத்தை தான் இன்று நமக்கும் கற்பிக்கின்றார்.

 அனுதினமும் பல பணிகளுக்கு மத்தியில் ஓடிக்கொண்டிருக்கின்ற பல நேரங்களில் சிலரின் நீதிக்காக, சிலரின் துயரத்தைத நீக்குவதற்கான முயற்சியில் ஈடுபடும் பொழுது அதை கண்டு கொள்ளாது, நம்மை அவர்கள் நிராகரித்தாலும் நாம் அவர்களை நிராகரிக்காது, இந்த மக்களை என்னை ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நாம் இவர்களுக்கான பணியினை செய்து கொண்டே செல்வேன் என்று  ஆண்டவர் இயேசுவின் போதனைகளின் அடிப்படையில் நமது வாழ்விலும் நாம் நல்லதையும், சமத்துவத்தையும், சமூக நீதியையும் இம்மண்ணில் நிலைநாட்டக் கூடிய இயேசுவின் பணியாளர்களாய்தொடர்ந்து...... நிராகரிப்பவர்களுக்கு மத்தியில் பயணம் செய்ய இறைவன் அழைப்பு தருகின்றார்.  
அழைப்பை உணர்ந்து கொண்டு வாழ்வில் சொல்லில், செயலில் மாற்றத்தைக் காண கூடியவர்களாக மாறிட இறையருளை வேண்டுவோம்.... ஏற்றாலும் நிராகரித்தாலும் நாம் அனைவரையும் ஏற்பவர்களாகவே இருப்போம்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...