நாம் பெயரளவு கிறிஸ்தவர்களா ...?
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இன்றைய நாளின் முதல் வாசகமும் நற்செய்தி வாசகமும் கிறிஸ்தவர் என அழைக்கப்பட கூடியவன் அல்லது கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவன், கிறிஸ்துவை பின்பற்றுகிறவன் எப்படி வாழ வேண்டும்? என்பதற்கான வழிமுறைகளை இயேசு முன்மொழிந்தவைகளை பவுலும் முன் மொழிகின்றார்.
கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவன்
பகைவரிடத்தில் அன்பும்,
வெறுப்போருக்கு நன்மையும்
சபிப்போருக்கு ஆசியும்,
இகழ்ந்து பேசுபவருக்கு இறைவேண்டலும்,
கன்னத்தில் அறைபவனுக்கு மறு கன்னத்தையும்,
மேலுடையை எடுத்துக்கொள்ள விரும்புபவனுக்கு அங்கியையும்,
கேட்கும் எவருக்கும் கொடுக்க கூடியவனாகவும்,
எடுத்துக் கொள்வோரிடமிருந்து திருப்பிக் கேட்காதவராகவும்,
பிறர் நமக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறோமோ அதையே அவர்களுக்கு செய்ய கூடியவனாகவும் மொத்தத்தில் மிகவும் வித்தியாசமான ஒரு மனிதனாக வாழ வேண்டும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் பகைவனை அன்பு செய்ய வேண்டும் என இயேசு கூறுகிறார். இந்த மண்ணில் வாழ்ந்த போது இயேசுவுக்கு எதிரிகள் என்று யாரும் இல்லை. ஆனால் இயேசுவை தங்களது எதிரியாக எண்ணியவர்கள் பலர் இருந்தனர். எனவேதான் இயேசுவின் மீது குற்றம்சாட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு அவரை பின்தொடர்ந்து கொண்டே இருந்தார்கள். ஆனால் இயேசு அவர்களை தன்னுடைய நண்பர்களாக கருதினார். எனவேதான் தனது உயிரை இறைவனது கையில் ஒப்புவிக்கும் முன்பாக, சிலுவையில் தொங்கிய வண்ணம் தன்னை இந்நிலைக்கு ஆளாக்கிய அனைவரையும் மன்னித்தவராய் தன் உயிரை இறைவனிடத்தில் தியாகம் செய்தார். இந்த இயேசுவை தான் நாம் நமது வாழ்வில் பிரதிபலிக்க அழைக்கப்படுகின்றோம்.
ஏசுவின் வார்த்தைகளும், பவுலின் போதனைகளும் பேசுவதற்கும், அடுத்தவருக்கு அறிவுரை கூறுவதற்கும் மிகவும் எளிதாக உள்ளது. ஆனால் அதனை வாழ்வாக்குவது என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஆனால் இவற்றை நம்மால் செயல்படுத்த முடியாது என்று அல்ல... ஏனென்றால் மனிதனாக இம்மண்ணில் இருந்த இயேசு மேற்கூறிய அனைத்தையும் தன் வாழ்வில் செயலின் மூலம் வெளிகாட்டியவர். அந்த இயேசுவைப் பின்பற்றுகின்ற நாமும் அவரைப்போலவே மாறமுடியும்
இயேசுவிடம் காணப்பட்ட பண்பு நலன்களை நாம் நமது வாழ்வில் கடைப்பிடித்து வாழுகின்ற போது நாம் இயேசுவை பின்பற்றுகின்றவர்கள் என்பது உண்மையாகும். மாறாக வெறும் வார்த்தைகளாக மட்டும் நாம் பயன்படுத்துவோம் என்றால் அது உண்மையான கிறிஸ்தவ வாழ்வாக அமையாது. நாம் பெயரளவில் கிறிஸ்தவர்களாக இல்லாமல், சொல்லும் செயலும் இணைந்து போகின்ற வகையில் இயேசுவின் போதனைகளின் அடிப்படையில் அவரைப் போலவே இந்த சமூகத்தில் வித்தியாசமாக அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ஆயனாக மாறிட இறையருளை இன்றைய நாளின் இணைந்து வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக