எதிர்பார்ப்பு இல்லை என்றால் கைமாறு உண்டு...
அன்புக்குரியவர்களை இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
ஒருமுறை ஒரு பேருந்தில் ஒரு வயதான மூதாட்டி ஒருவர் நின்று கொண்டிருந்தார். அருகில் அமர்ந்திருந்த ஒரு 18 வயது மிக்க ஒரு பெண் எழுந்து நின்று அந்த வயதான மூதாட்டி அமர்வதற்கு இடம் கொடுத்தார். அதை பார்த்த அந்த பேருந்தில் இருந்த இன்னொரு மூத்தவர் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் எழுந்து நின்று அந்தப் பெண்மணிக்கு அமர்வதற்கு இடம் கொடுத்தார்.
இந்த நிகழ்வை பார்க்கும் பொழுது உள்ளத்தில் ஒருவிதமான உணர்வு எழுந்தது... எந்தவித பயனும் இன்றி நாம் அடுத்தவருக்கு செய்கின்ற சின்ன உதவிக்கு நமக்கு கண்டிப்பாக கைமாறு கிடைக்கும் என்பதாகும்.
தனக்கு மற்றவர் இடம் தருவார் என்ற எண்ணத்தோடு இந்த பதினெட்டு வயது நிரம்பிய பெண் இடம் தரவில்லை அந்த மூதாட்டிக்கு....அதுபோலவே 40 வயது மிக்க அந்த பெரியவரும் இந்த சிறுமிக்கு இடம் கொடுக்கும் பொழுது தனக்கு கைமாறு கிடைக்கும் என்று எண்ணவில்லை..... எந்தவித எதிர்பார்ப்புமின்றி செய்கின்ற உதவியினால் கைமாறி நிச்சயம் கிட்டும் இதையே இன்றைய நாள் வாசகங்களில் இயேசு கிறிஸ்து வெளிப்படுத்துகிறார். நாம் இயேசுவின் சீடர்கள் என்பதற்காக யாரேனும் ஒருவர் ஒரு குவளை நீர் கொடுத்தாலும் அவர் கைமாறு பெறுவார் என்கிறார்.
முன்பெல்லாம் நமது வீடுகளில் ஒரு வழக்கம் இருந்தது யாரேனும் உதவி வேண்டி வீட்டிற்கு வந்தால் வீட்டில் உள்ள சிறு குழந்தைகளிடம் சிறிதளவு தொகையையும் அல்லது வீட்டில் இருக்கும் ஏதாவது உணவை கொடுத்து அவருக்கு தானமாக கொடுக்க சொல்லுவோம் தெரிந்தோ தெரியாமலோ இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற பாடத்தை சிறுவர்களுக்கு கற்பிப்பது உண்டு. என்றும் என் நிலை பல இடங்களில் தொடர்கிறது....
ஆண்டவர் இயேசு கிறிஸ்து இத்தகைய பண்பை தான் நம் ஒவ்வொருவரிடத்திலும் எதிர்பார்க்கின்றார். எந்தவித எதிர்பார்ப்புமின்றி நாம் அடுத்தவருக்கு செய்கின்ற உதவியினால் கண்டிப்பாக இறைவன் மன மகிழ்ச்சி கொள்வார் என்பது உண்மையாகிறது.
இயேசு கிறிஸ்துவும் இந்த மண்ணில் வாழ்ந்த போது தன் முன் பின் அறியாத, யாரென்றே தெரியாத பலருக்கு தன்னிடம் கேட்கிறார்கள் என்பதற்காகக் தன்னால் இயன்றதை அவர்களுக்கு செய்தார், மற்றவர்களையும் அவர்களுக்கு உதவி செய்ய கற்பித்தார். இன்று ஆண்டவர் இயேசுவின் பெயரால் அவரது பணியை செய்கின்றோம் என்ற பெயரில் இந்த உலகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கக் கூடிய நாம் ஒவ்வொருவருமே அவரைப் போலவே இந்த சமூகத்தில் உள்ள ஒருவர் மற்றவருக்கு நம்மிடம் இருப்பதை பகிரவும், எதிர்பார்ப்புகள் இல்லாமல் மனித உறவுகளோடு நல்லதொரு உறவினை வளர்த்துக் கொள்ளவும் அழைக்கப்படுகிறோம்.
ஆனால் இன்று பெரும்பாலும் கடவுளின் பெயரை வைத்து நிறைய பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி காணப்படுகிறது.
மக்களுடைய எளிய நம்பிக்கை எல்லாம் என்று வியாபாரப் பொருளாக மாற்றப்படுகிறது.
கடவுளை விட காசு முதன்மையானது என்ற எண்ணமானது மேலோங்கி காணப்படுகிறது.
ஆனால் மனித மனங்களில் முதன்மையானதாக இருக்க வேண்டியது மனிதநேயமே.
இந்த மனித நேயம் மட்டுமே நம்மை ஆண்டவர் இயேசு உண்மைச் சீடராக மாற்றும். இந்த மனித நேயம் மட்டுமே யாரென்று தெரியாதவருக்கு இருப்பதை பகிர்ந்து கொள்ள நம்மை தூண்டும். இந்த மனித நேயம் மட்டுமே பார்க்கின்ற ஒவ்வொரு உறவுகளிடமும் கடவுளை கண்டு கொள்ள உதவி செய்யும்.
மனித நேயம் என்பது இன்று குறைந்து கொண்டே வருகிறது. நிலவுகின்ற இக்கட்டான சூழ்நிலைகள் கூட இந்த மனித நேயத்தை நாம் நமக்கு நாமே திருப்பிப் பார்த்துக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக அமைகிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்றைய நற்செய்தி வாசகத்தில் எந்தவித எதிர்பார்ப்புமின்றி நாம் செய்கின்ற உதவிக்கு கைமாறு கிடைக்கும் என்கிறார். ஆண்டவர் கூறுவதை உள்ளத்தில் இறுத்துக்கொண்டு எதிர்பார்ப்புகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு ஆண்டவரை மனதில் நிறுத்தி, மனிதநேயத்தை மனதில் நிறுத்தி.... கண்ணால் காணக்கூடிய சக மனிதனையும் கடவுளாக பாவிக்க கூடியவர்களாக நாமும் மாறி நம்மிடம் இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்துகொண்டு, எப்போதும் அன்போடு, அறத்தோடு, சகோதரத்துவத்தோடு நமக்குள் இருக்கக்கூடிய போட்டி, பொறாமை போன்றவற்றை அகற்றி.... மனிதனை மனிதனாக மதித்து. . நாம் அனைவரும் சமம்..... கடவுளின் பிள்ளைகள் நாம்... என்பதை நமது செயல்கள் மூலம் வெளிக்காட்டி.... கைமாறு கருதாது உழைக்கின்ற இயேசுவின் பணியாளர்களாக மாறிட இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக