இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது தான் வாழுகின்ற இந்த சமூகத்தில் உள்ள அனைவருக்கும் நலமான பணிகளை செய்யக் கூடியவராக இருந்தார். இயேசுவின் செயலை கண்டு அவரது வார்த்தையும் வாழ்வும் இணைந்து இருப்பதைக் கண்டு பலர் அவரை நோக்கி வரத் தொடங்கினார்கள். இயேசுவும் தனக்குப் பிறகு இந்தச் சமூகத்தில் நலமான பணிகளை முன்னெடுத்துச் செல்லக்கூடிய நபர்களை சமூகத்திற்கு விட்டுச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு பலரை தன் பணிக்காக அழைத்தார்.
திரு அவையை உன்மேல் கட்டுவேன் என கூறிய பேதுரு தொடங்கி இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து வரை அனைவரையும் இயேசு ஒன்றாக கருதினார். அனைவருக்கும் நலமான பணிகளைச் செய்ய கற்பித்தார். தன்னைப் போலவே தன்னுடைய சீடர்களும் இந்த சமூகத்தில் நலமான பணிகளை முன்னெடுத்துச் செல்லக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பதை தன் வாழ்வு வழியாகவும், வாய் மொழிகள் வழியாகவும் அவர்களுக்குக் கற்பித்தார்.
இயேசுவிடம் இருந்து கற்றுக் கொண்ட வாழ்க்கை பாடத்தை தங்கள் வாழ்வில் செயலாற்றத் தொடங்கிய சீடர்களின் வாழ்வு தொடக்ககால கிறிஸ்தவர்களை வலுவூட்டியது கிறிஸ்தவர்கள் இயேசுவின் மீதாக கொண்டிருக்கக்கூடிய பற்றை கண்டு ஒருபுறம் வியந்து போனவரான பவுல் மற்றொரு புறமோ இந்த இயேசுவின் பெயரை அறிக்கையிடுபவர்களைக் கொன்று குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பயணத்தை தொடங்கியவர். ஆனால் இயேசுவால் தொடப்பட்ட போது தன் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டவராய் இயேசுவின் பெயரை அறிவிப்பவரை கொலை செய்வேன் என்று கிளம்பியவர் இயேசுவின் பெயரை அறிவிக்கும் சாட்சியாக மாறிப் போனார். அந்த பவுல் தான் இன்றைய முதல் வாசகத்தின் வழியாக நாம் கடவுளோடு இணைந்திருப்பதுதான் நிறைவு இருக்கிறது என்பதை நமக்கு கற்பிக்கின்றார்.
இயேசு நமக்காக இருந்தார். நமக்காக நம் பாவங்களுக்காக தன்னையே பலியாக்கியாவர். அந்த இயேசு கிறிஸ்துவை போல தான் நம் ஒவ்வொருவரின் வாழ்வும் அமைய வேண்டும். இந்த இயேசுவைப் பின்தொடர்ந்த பவுலும் தன் வாழ்வில் பலவிதமான நற்செயல்களை எடுத்துரைத்து இறையாட்சியின் சமூகத்தையும் மண்ணில் மலரச் செய்வதற்கான முயற்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி ஆண்டவருக்காக தன் இன்னுயிரையும் தியாகம் செய்தார். ஆண்டவர் இயேசுவோடு இணைந்து இருப்பதில்தான் நிறைவு என்பதை தன் வாழ்வால் வெளிக்காட்டிய இந்த பவுலின் வார்த்தைகளுக்கு ஏற்ப இன்று நாம் நம்மையும் ஆண்டவர் இயேசுவோடு இணைந்து இருப்பதில்தான் நிறைவு இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டு இம் மண்ணில் வாழும் ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு நிமிடமும் ஆண்டவர் இயேசுவிடம் காணப்பட்ட அனைத்து விதமான நற்பண்புகளையும் நாமும் நமது வாழ்வில் நமது செயல்கள் மூலம் வெளிகாட்ட கூடிய மக்களாக மாறிட இறையருளை இன்றைய நாளில் இணைந்து வேண்டுவோம்.
ஆண்டவர் இயேசுவோடு இணைந்து இருப்பதில் தான் நிறைவு இருக்கின்றது. அந்த நிறைவை கண்டுகள்ள இறைவன் நமக்கு உதவி செய்ய அருள் வேண்டி இணைந்து ஜெபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக