"நாம் தேட வேண்டியது எதை?"
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இன்றைய நாள் வாசகங்கள் அனைத்தும் "நாம் தேட வேண்டியது எதை?" என்று ஆழமாக சிந்திக்க அழைப்பு தருகின்றன. இன்றைய நாளின் முதல் வாசகம், இந்த உலகத்தில் நிலையானது என எண்ணி நாம் தேடித் தேடி சேர்க்கக்கூடிய செல்வங்கள் எல்லாம் நிலையானது அல்ல! என்ற செய்தியினை ஆழமாக வலியுறுத்துகின்றன. நிலையற்ற இந்த செல்வங்களை நிலையானது என எண்ணி, நாம் ஓடி ஓடித் தேடி அவற்றை சேர்ப்பதில் நமது நேரத்தை செலவிடுவதை தவிர்த்து, ஆண்டவர் இயேசு கிறிஸ்து என்றும் மாறாது, எப்போதும் நம்மோடு நிலையாக இருக்கக்கூடியவர்.
நிலையான இந்த இயேசு கிறிஸ்துவை தேடவும், அவரை நாம் கண்டு கொள்ளவும், அவருடைய மதிப்பீடுகளை நமது பண்புகளாக சேர்த்துக் கொள்ளக் கூடியவர்களுமாக நாம் மாறிட, இன்றைய நாள் வாசகங்கள் அழைப்பு விடுக்கின்றன. ஆண்டவர் இயேசுவைத் தேடிச் சென்று அவரை தங்களது செல்வமெனக் கருதி, சேர்த்த பல நபர்களைத் தான் இன்றைய நற்செய்தி வாசகம் நினைவுறுத்துகிறது. இயேசுவோடு இருந்த சீடர்கள், இயேசுவை, நிலையான
சொத்து எனக் கருதினார்கள். நிலைவாழ்வு தருகின்ற வார்த்தைகள் அவரிடமே இருக்கிறது என உணர்ந்திருந்தார்கள். எனவே அவரைப் பின்பற்றினார்கள்.
அவரைத் தேடக் கூடியவர்களாக, அவருக்கு சாட்சியம் பகிரக் கூடியவர்களாக வாழ்ந்தார்கள் என்பதை இயேசுவின் சீடர்களின் வாழ்வு நமக்கு வெளிக் காட்டியது.
அது போலவே, பல விதமான பேய்களால் பீடிக்கப்பட்டு இருந்த பெண்மணியும் சரி, மகதலா மரியாவும் சரி, கூசாவின் மனைவி யோவன்னாவும் சரி, சூசன்னாவும் சரி, இவர்கள் எல்லாம் ஆண்டவர் இயேசுவோடு உடன் பயணித்தவர்கள். இயேசுவின் சீடர்கள் ஆண்கள் மட்டும் என்ற ஒரு பார்வை பொதுவாகப் பார்க்கப்பட்ட சூழ்நிலையில், பெண்களும் ஆண்டவர் இயேசுவின் பணியை செய்யக் கூடிய சீடர்களாக இருந்தார்கள் என்ற சிந்தனையையும், இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு தருகின்றது. இயேசுவைப் பின்தொடர்ந்த சீடர், ஆண்களோ பெண்களோ அவர்கள் ஆண்டவர் இயேசுவையே நிலையான சொத்து எனக் கருதினார்கள். அவரே நிலையானவர்; அவரையே தேடவேண்டும்; அவரது வார்த்தைகளுக்கு ஏற்ப தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என எண்ணினார்கள். எண்ணிய எண்ணத்திற்கு, அவர்கள் வாழ்வு மூலம் செயலில் அதனை வெளிக்காட்டக் கூடியவர்களாக மாறினார்கள். எனவே தான் இன்றும் அவர்களை நாம் நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறோம்.
நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கக் கூடிய இந்த உலகத்திற்கு மத்தியில், இன்றைய நாள் வாசகங்கள், நிலையானவர் இறைவன் ஒருவரே! என்ற சிந்தனையை நமக்குத் தருகின்றன. இந்த நிலையான இறைவனை நமது உரிமைச் சொத்தாக மாற்றிக் கொள்ள, நாம் நமது வாழ்க்கை என்னும் பயணத்தில் முயற்சிக்க வேண்டும். இத்தகைய முயற்சியை கையில் எடுக்காது நிலையற்ற செல்வங்களை எல்லாம் நிலையானது என எண்ணி, தேடி ஓடிக் கொண்டிருக்கக் கூடியவர்களாக நாம் இருந்த நாட்களை நினைத்து, அந்த பாதையில் இருந்து மாற்றம் பெற்றவர்களாக ஆண்டவரை நிலையான உரிமையாக்கிக் கொள்ள, இயேசுவின் பாதையில் பயணத்தை தொடர இன்றைய நாளில் இறையருள் வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக