திங்கள், 13 செப்டம்பர், 2021

சிலுவையை சுமப்பது நிலை வாழ்வை உரிமையாக்குவதற்கான வழி...(14.9.2021)

சிலுவையை சுமப்பது நிலை வாழ்வை உரிமையாக்குவதற்கான வழி...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இன்று நாம் தாய் திரு அவையாக இணைந்து திருச்சிலுவையின் மகிமையை நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறோம்.

சிலுவை துன்பத்தின் அடையாளம்
சிலுவை மீட்பின் அடையாளம் 
சிலுவை வெற்றியின் அடையாளம்
சிலுவை வாழ்வின் அடையாளம்
சிலுவை இயேசுவின் அடையாளம் 
சிலுவை இயேசுவை ஏற்றுக் கொண்டவர்களின் அடையாளம்....

சிலுவையை குறித்து இவ்வாறு பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். யூத சமூகத்தில் உரோமையர்களால் கொடுக்கப்பட்ட கொடூரமான தண்டனை தான் சிலுவை மரணம். இந்த சிலுவை மரணம் அவமானத்தின் சின்னமாக கருதப்பட்டது. ஆனால் இயேசு இந்த சிலுவை மரத்தில் தனது உயிரை துறந்த போது  சிலுவை மரணம் என்பது மீட்பின் அடையாளமாக மாறியது.

சிலுவையை பலவற்றிற்கு அடையாளமாக பயன்படுத்துகின்ற நாம் நமது வாழ்வில் சிலுவை சுமக்க தயாரா? என்ற சிந்தனையை இன்றைய நாளில் நாம் நமக்கு உள்ளாக சுய ஆய்வு செய்து பார்க்க அழைக்கப்படுகின்றோம்.

என்னை பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் மறந்து தன் சிலுவையைத் தூக்கிக் கொண்டு என்னை பின் தொடரட்டும் என்கிறார் இயேசு கிறிஸ்து.  இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றி இந்த சமூகத்தில் பயணம் செய்ய விருக்கின்ற நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்வில் இருக்கும் துன்பம் என்ற சிலுவையை சுமக்க தயாராக இருக்கிறோமா? அல்லது அதனை இறக்கி வைத்துவிட்டு செல்லவே விரும்புகின்றோமா? நம்மையே நாம் கேள்விக்கு உட்படுத்தி பார்ப்போம்.
இயேசு கடவுளாக இருந்தபோதும் தம்மைத் தாழ்த்திக் கொண்டு  மனிதனாக  தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் நிலையை ஏற்று, சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து, தன்னையே தாழ்த்திக் கொண்டார், எனவே அவரை இறைவன் உயிருக்கு மேலாக உயர்த்தினார் என்று பவுலடயார் பிலிப்பு நகர மக்களுக்கு எடுத்துரைக்கின்றார்.

இந்த இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றி அவரது பாதையில் நமது பயணத்தை அமைத்துக் கொண்டு இருக்கக்கூடிய நாம், நமது வாழ்வில் அவரைப்போல நம்மையே நாம் தாழ்த்திக்கொண்டு, அடுத்தவர் நலனையும், அகிலத்தின் நலனையும் முன்னிறுத்தி, கடவுளுக்கு கீழ்ப்படிந்து இவ்வுலகத்தில் வருகின்ற அனைத்து விதமான சவால்களையும் எதிர்கொண்டு சிலுவையில் வெற்றியை காண நாம் தயாராக இருக்க வேண்டும் என்ற சிந்தனையை இறைவன் இன்றைய நாளில் நமக்குத் தருகின்றார்.
சிலுவையில் அடுத்தவருக்காக தனது இன்னுயிரை தந்த இறைவன், நாம் இந்த உலகத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதன் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார். அவரை பின்பற்றுகின்ற நாமும் தன்னலம் துறந்து சிலுவையை சுமந்து கொண்டு அவரது பாதையில் பயணம் செய்து நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள இறையருளை இணைந்து வேண்டுவோம் இன்றைய நாளிலே.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...