இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்
இன்றைய நாள் வாசகங்கள் அனைத்தும் முன்மாதிரிகளை விளங்கிட நமக்கு அழைப்பு விடுக்கின்றன. ஆண்டவர் படைத்த இந்த அழகிய உலகில் அனுதினமும் அவரிடமிருந்து அபரிவிதமான ஆசிகளையும், அனுபவங்களையும் பெற்று கொண்டு நமது வாழ்வை நகர்த்தி கொண்டிருக்கின்ற நாம் இன்றைய நாளில் இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன? என சிந்திக்க அழைக்கப்படுகின்றோம்.
கடவுள் தாம் படைத்த உலகை உற்று நோக்கினார் அவை மிகவும் அழகாயிருந்தது என தொடக்க நூலில் வாசிக்கின்றோம்.
கடவுளின் படைப்புகளில் சிறந்த படைப்பாக விளங்குகின்ற மனிதர்களாகிய நாம் மனிதநேயம் மிக்கவர்களாக இந்த சமூகத்தில் நமது பேச்சாலும், நடத்தையாலும், அன்பாலும், நம்பிக்கையாலும், தூய்மையான வாழ்வு நெறியாலும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ இறைவன் இன்றைய நாளின் முதல் வாசகம் வழியாக நமக்கு அழைப்பு விடுகின்றார்.
இன்றைய நாளில் நற்செய்தி வாசகத்தில் கூட தான் பாவி என உணர்ந்த பெண் தன் பாவத்தை போக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இயேசுவின் பாதத்தில் சரணாகதி அடைந்ததை நாம் வாசிக்கின்றோம். ஆண்டவரின் பாதத்தில் சரணாகதி அடைகின்ற போது அனைத்து விதமான தீமைகளிலிருந்தும், தவறான வாழ்வில் இருந்தும் நாம் நம்மை மாற்றிக் கொண்டு அவரின் பாதையில் பயணம் செய்யக்கூடியவர்களாக எளிதில் மாறிவிட முடியும். அதற்கு நாம் செய்ய வேண்டியது நமது வாழ்வில் நாம் ஆண்டவர் இயேசுவைப் பிரதிபலிக்க கூடியவர்களாக வாழவேண்டும். இதனை வார்த்தையால் அல்ல நமது செயல்களால் வெளிக்காட்ட வேண்டும். அவ்வாறு வாழுகின்ற போது இறைவன் முன்மாதிரியாக திகழும் நமது வாழ்வை குறித்து மன மகிழ்வு கொள்வார் என்ற நம்பிக்கையோடு, நமது வாழ்வை சீர்தூக்கிப் பார்த்து, இனி வருகின்ற நாட்களில் முன்மாதிரியான வாழ்வினை நாம் நமது வாழ்வாகக் கொண்டு இயேசுவின் பாதையில் பயணம் செய்ய இறையருள் வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக