இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஓர் ஆலயத்தில் ஒரு குடும்பத்தினர் 28 வகை காணிக்கைகளைool அருள்பணியாளரிடம் திருப்பலி நேரத்தில் காணிக்கை வழிபாட்டின்போது காணிக்கையாகக் கொடுத்தார்கள். அதனைக் கண்ட பலர் பலவிதமான முனுமுனுப்புக்களைo கொடுத்தார்கள்.
ஒருவர்: பணம் இருக்கிறது என்பதை காட்டுகிறார்கள்.
ஒருவர்: இவ்வளவு பொருட்களை கொடுக்க வேண்டியது அவசியம்தானா? என்றார்.
ஒருவர்: ஏன் இவர்கள் இவ்வளவு வீண் செலவுகளை செய்கிறார்கள்.
ஒருவர்: இறைவனுக்கு கொடுப்பதற்கு முன்வந்திருக்கிறார்கள் இது பாராட்டுக்குரியது என்றார்.
இச்செயலில் நமது மனநிலை என்னவாக இருக்கும் என்பதை விட கொடுப்பவரின் மனநிலை என்ன என்பதே அவசியம் ?....
மனம் என்பதை குரங்குக்கு ஒப்பிடுவார்கள. குரங்கு கிளைக்கு கிளை தாவி கொண்டே இருப்பது போல மனமானது ஒரு ஆசையில் இருந்து மற்றொன்றுக்கு என தாவி கொண்டே இருக்கும்.
ஆசை கொண்ட மனம் நிராசை அடையும்பொழுது நிராசை அடைந்து மனதில் போராட்டம் துவங்குகிறது எப்படியாவது எதையாவது செய்து தன் ஆசையை ஈடேற்ற வேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தில் எழுகிறது. அந்த ஆசையை நிறைவேற்றப்படும் பொழுது மற்றொன்றின் மீது ஆசை கொண்ட மனம் தயாராகிறது. இதுவே வாழ்வின் எதார்த்தமாக இருக்கின்றது. ஆனால் இன்றைய நாள் வாசகங்கள் அனைத்தும் நமது மனநிலையை குறித்து ஆராய்ந்திட அழைப்பு தருகின்றன.
எங்களுக்கு வகுப்பு எடுத்த அருள்பணியாளர். சிங்கராயர் (தற்பொழுது சிவகங்கை மாவட்டத்தில் உலக நாதபுரம் என்ற பங்குகில் இருக்கின்றார்). இவர் எப்போதும் எங்களிடத்தில் கூறுவது எதை செய்கிறோம் என்பதைவிட எந்த மனநிலையோடு செய்கிறோம் என்பதே முக்கியமானது எனக் கூறுவார். தந்தை அவர்களின் வார்த்தை எந்த ஒரு செயலையும் செய்யும் பொழுது மிகப்பெரிய தாக்கத்தை எங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்டிருக்கும். எதை செய்கிறேன் என்பதை விட எந்த மனநிலையோடு செய்கின்றேன்? என்ற கேள்வி அடிக்கடி என்னையும், என் வாழ்வையும், என் செயல்பாடுகளையும் திருப்பிப் பார்க்க உதவியாக உள்ளது.
இன்றைய முதல் வாசகத்தில் சைரஸ் மன்னன் ஆண்டவருக்கு ஆலயம் எழுப்ப எண்ணுகிறார். அதற்கான பொருளாதார உதவியை மக்களிடம் நாடிய போது மக்கள் மனமுவந்து தங்களிடமிருந்த பொன், வெள்ளி என அனைத்தையும் கொடுத்து உதவினார்கள் என முதல் வாசகம் கூறுகிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஒளியை ஏற்றி மறைவான இடத்தில் வைப்பதற்கு பதிலாக, பலரும் பயன்பெறக்கூடிய வகையில் உயரத்தில் வைக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார். நாம் நமது வாழ்வில் அனுதினமும் ஓடி ஓடி சேர்க்கின்ற செல்வங்கள் எல்லாம் எதற்கு என்ற கேள்வியை சிந்திக்கின்ற போது அரை சாண் வயிற்றுக்காக தான் அனுதினமும் ஓடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் தேவைக்கு அதிகமாக பொருட்களை சேர்த்து சேர்த்து வைக்கின்றோம். சேர்த்ததை இல்லாத உறவோடு பகிர்ந்து கொள்ள முன்வரும் போது மட்டுமே மனநிறைவானது சாத்தியமாகும். இல்லை என்றால் ஆசைகளின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் பயனித்து கொண்டிருக்குமே ஒழிய மனநிறைவு அடையக் கூடியவர் களாக மாற இயலாது. இன்றைய வாசகங்கள் அனைத்தும் இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்து கொண்டு வாழ அழைப்பு தருகின்றன.
இருப்பதை பகிர்வது என்பது ஆடம்பரத்தை மையமாகக் கொண்டா அல்லது பெயருக்காகவும், புகழுக்காகவுமா? அல்லது உண்மையான நற்செயல் புரிய வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலா? கேள்வியை நாம் நமக்குளாக எழுப்பி பார்ப்போம். நாம் எதை செய்தாலும் எந்தவித மனநிலையோடு அதனை செய்கின்றோம் என சிந்திப்போம்.
இயேசுவைப் போல எந்தவித எதிர்பார்ப்புமின்றி அடுத்தவருக்காக தன் இன்னுயிரையும் தியாகம் செய்யக்கூடிய அளவிற்கு இருப்பதை இல்லாதவரோடு பகிரவும், இருப்பதில் நிறைவு காணவும், செய்கின்ற செயலை கடமைக்காக செய்யாது, மனநிறைவோடு, நல்லெண்ணத்தோடு நல்மனதோடு செய்திடவும் இன்றைய நாள் வாசகங்கள் வழியாக நமக்கு அழைப்பு தரப்படுகிறது. எனவே எதை செய்கிறோம் என்பதைவிட எந்த மனநிலையோடு ஒரு செயலை செய்கிறோம் என்ற கேள்வியை அடிக்கடி உள்ளத்தில் எழுப்பி பார்ப்போம். நல்ல செயல்களைத் தொடர்ந்து செய்ய இறையருளை வேண்டுவோம்.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக