இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
தடுக்க நினைத்தாலும் தடுக்க முடியாதது எது? என்ற கேள்வியை உள்ளத்தில் எழுப்பி பார்த்தால் அன்பு என்பதே அதற்கு சரியான பதிலாக இருக்க முடியும் என எண்ணுகிறேன்.
ஒருவருக்கு எப்போது காதல் வரும் என்பது யாருக்கும் தெரியாது... ஏன் காதல் வந்தது என்றாலும் தெரியாது...
எப்போது? எப்படி? எதனால்? என்ற கேள்விகளுக்கு விடை தெரியாத ஒன்று தான் காதல் என்பார்கள்.
காதலின் பெயரால் உருவாகின்ற இந்த அன்பு உறவில் சில நேரங்களில் அன்பு என்பது மிகவும் கடுமையான ஒன்றாக இருக்கும். அன்பின் மிகுதியால் சில இடங்களில் வன்முறைகளும், கொலைகளும் நடந்தேறுகின்றன என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையே.... அது உண்மையான அன்பு அல்ல...
உண்மையான அன்பு என்பது நம் விருப்பப்படி அனைவரும் இருக்க வேண்டும் என்பது அல்ல மாறாக மற்றவரை அவர் இருப்பது போலவே ஏற்றுக் கொள்வதுதான் உண்மையான அன்பாகும்.
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாள் என்பதற்கு ஏற்ப.... ஆயிரம் அணு ஆயுதங்களால் சாதிக்க முடியாததையும் அன்பு என்ற ஒற்றை சொல்லை கொண்டு சாதிக்க முடியும்.... அன்புக்கு ஆக்கவும் தெரியும், அழிக்கவும் தெரியும்... என பலர் கூறுவது உண்டு.
ஆனால் அன்பு என்பது அழிவுக்கான ஒன்று அல்ல, இது ஆக்கத்திற்கு மட்டுமே பயன்படக்கூடிய ஒன்று. இன்று நிலவும் இந்தச் சூழ்நிலைகளில் சில நேரங்களில் அன்பைக் கொண்டு பல இதயங்களை காயப்படுத்தும் நிகழ்வானது அனுதினமும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இந்த அன்பு வெறி என்பது நம் உள்ளத்தை இருத்தலாகாது என்பது இன்றைய நாள் வாசகங்கள் வழியாக இறைவன் நமக்குத் தருகின்ற செய்தியாக உள்ளது.
அன்பு எப்போதும் அனைவரையும் அரவணைக்க கூடிய ஒன்றாகவே இருக்க வேண்டும் அன்பு என்பது நானா? நீயா? என்ற போட்டிக்கு இடம் தரக் கூடாது. நாம் என்ற உணர்வோடு பயணிக்க வேண்டும். அன்பு என்பது குறைகளை பெரிது படுத்தாது நிறைகளை மட்டுமே முன்னிறுத்தி நலமான நல்ல உறவினை ஒருவர் மற்றவருக்கு இடையே உருவாக்க வேண்டும். இத்தகைய பண்புகளை கொண்டவர்களாக நாம் இச்சமூகத்தில் வலம் வர வேண்டும் என்பது இறைவனது விருப்பம். எனவே தான் இயேசுவின் பெயரால் பேய்களை ஓட்டி இயேசுவுடன் இல்லாதவர்களை கண்டு இயேசுவின் சீடர்கள் பொறாமை கொண்ட போது அங்கு பொறாமை கொள்ள வேண்டிய அவசியமில்லை மாறாக அன்பு கொள்ள வேண்டும் என்ற செய்தியினை இறைவன் முன் நிறுத்துகிறார். அது போலவே தங்களில் யார் பெரியவர்? என்ற விவாதத்தில் ஈடுபடும் போது கூட ஒரு சிறு குழந்தையை முன்னிறுத்தி இந்த குழந்தையை ஏற்றுக் கொள்பவர் என்னை ஏற்றுக் கொள்கிறார் என்று அன்பு உயர்வு தாழ்வு கருதாது அனைவரையும் ஒன்றாக கருத வேண்டிய ஒன்று என்ற வாழ்க்கை பாடத்தை இயேசு கற்பிக்கிறார்...
இயேசுவின் அடிச்சுவட்டை பின்பற்றி வருகின்ற நாம் இந்த அன்பு என்பதைக் கொண்டு இந்த சமூகத்தில் நாம் செய்கின்ற பணிகள் என்ன? என சீர்தூக்கிப் பார்ப்போம். அன்பின் அடிப்படையில் அனைவரையும் அரவணைத்து செல்ல கூடியவர்களாக நமது பாதை இருக்கிறதா? அல்லது அன்பின் பெயரால் ஏமாற்றுபவர்களாகவும், போலி அன்பு கொண்டவர்களாக நாம் பயணம் செய்து கொண்டு இருக்கின்றோமா? கேள்வியை நமக்கு நாமே எழுப்பி பார்ப்போம்.
அன்பு தன்னலம் கருதாது பிறர் நலத்தை முன்னிறுத்துவது... அன்பு என்ற வார்த்தைக்கு அர்த்தம் தரக்கடிய வகையில் நமது வாழ்வு அமைய இறையருளை இன்றைய நாளில் இணைந்து வேண்டும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக