வியாழன், 2 செப்டம்பர், 2021

சட்டங்கள் பேசுகின்றனவா? மனிதர்கள் பேசுகின்றனரா?...(3.9.2021)

சட்டங்கள் பேசுகின்றனவா? மனிதர்கள் பேசுகின்றனரா?


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில், என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
 மனம் என்பது ஒரு குரங்கை போன்று கிளைக்கு கிளை தாவி கொண்டே இருப்பது. மனம் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். ஆனால், இந்த உலகத்தில் மாறாதிருப்பது சட்டங்களே!  இவைகளை நாம் தான் மாற்றியாக வேண்டும்.  ஆனால், மக்கள் நலன் முன்னிருத்தப் படக்கூடிய சட்டங்களுக்காக,  மக்கள் போராடி மாற்றத்தை கொண்டு வருகிறார்கள்.  ஆனால் மக்களை கட்டுப்படுத்தி அடக்கி ஆள வேண்டும் என எண்ணக்கூடிய சட்டங்கள் எப்போதும் மாறாதே இருந்து வருகிறது.  அதனை மாற்ற யாரும் விரும்புவதில்லை. 

 இன்றைய நற்செய்தி வாசகத்திலும் கூட,  பழைய சட்டங்களை சுட்டிக் காண்பித்து,  இயேசுவின் சீடர்கள், மரபை பின்பற்றவில்லை, பழைய சட்டங்களை பின்பற்றவில்லை, மூதாதையர்கள் உருவாக்கிய சட்டங்களை மீறுகிறார்கள் என்ற செய்தியினைக் கூறி, அவர்களை குற்றம் சாட்டக்
கூடிய பணியில்,  பரிசேயர்களும் சதுசேயர்களும் ஈடுபடுகிறார்கள்.  ஆனால் இயேசுவோ, வெறுமனே  சட்டத்தை பிடித்துக் கொண்டிருப்பதை விட,  அந்தச் சட்டத்தால் முன் நிறுத்தப்படுவது எது? அந்த சட்டம் எதற்காக?  அந்த சட்டம் உருவாக்கப்பட்டதன் உண்மை நோக்கம் என்ன?  வெறுமனே எழுதப்பட்ட சட்டத்தை தூக்கிக்கொண்டு நிற்பதா?  அல்லது அந்த சட்டத்தின் உண்மையான அர்த்தத்தை உணர்ந்து அதனை பின்பற்றக் கூடியவர்களாக இருப்பதா? என்பதை அவர்களுக்கு தெளிவுபடுத்தும் விதமாக தன் சீடர்கள் சார்பாக பேசுகிறார். 

         இன்று! நம் சார்பாக பேசுவதற்கு யார் இருக்கிறார்? என்ற எண்ணம் தான் பலரை, நல்ல செயல்களைக் கூட செய்ய விடாமல் தடுத்துக் கொண்டே இருக்கிறது.  உருவாக்கப்படக்கூடிய சட்டங்கள் மக்களின் நலனுக்கானது அல்ல, மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது என அறிந்தாலும் கூட, அதை குறித்து பேசுவதற்கு இன்று பலரும் தயக்கம் காட்டி நிற்கிறார்கள்.  ஏன்? இத்தகைய தயக்கமென சிந்திக்கின்ற போது, மக்களின் நலம் சார்பாக பேசும்போது, பேசுபவருக்கு துணையாக, உறுதுணையாக இயேசுவைப் போல இருக்கக் கூடியவர்கள் இருக்கிறார்களா?  என்ற கேள்வி முன் வந்து செல்கிறது. 

                 உண்மையைப் பேசினாலும், நல்லதைச்
சொன்னாலும்,  நம் சார்பாக ஆட்கள் இல்லை என்றால், அது நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்றாகவே கருதப்படுகிறது. ஆளும் வர்க்கம் சட்டங்களை இயற்றுகிறது.  இயற்றப்பட்ட சட்டங்கள் நலமானது இல்லை என அறிந்தாலும், அதனை மாற்ற இயலாத சூழ்நிலையில் தான் இன்று பலர் இருக்கிறோம். சட்டங்கள் மாற்ற இயலாதவை அல்ல,  மாற்ற இயலும்.  அதற்கு ஒவ்வொருவரின் துணையும் தேவைப்படுகிறது.  
         ஒரு கை ஓசை எழுப்பாது எனக் கூறுவார்கள்.  இரு கை இணைந்தாலே,  ஓசை எழுப்ப முடியும் என்பார்கள். ஒருவர் மட்டுமே மாற்றத்தை நோக்கி நல்லதை முன்னிறுத்தி, கத்திக் கொண்டே இருப்பதால் மாற்றம் நிகழும், ஆனால் உடனடியாக அல்ல, தாமதமாகவே. பலருடைய காதுகளுக்கு இவரது குரல் எட்ட வேண்டும்.  அப்போது இவரது கருத்தைப் புரிந்து கொண்டு பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று சேருகின்ற போது தான், ஒரு மாற்றமானது ஏற்பட இச்சமூகத்தில் வாய்ப்புகள் உருவாகின்றன. 

       ஆனால், இன்றைய நாளில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்கள் செய்ததை சரி, தவறு என நியாயப்படுத்தவில்லை. சட்டத்தின் உண்மையான நோக்கம் என்ன? என்பதை மட்டுமே தெளிவுபடுத்தக் கூடியவராக இருக்கிறார். நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் நல்லதை மனதில் இருத்தி,  நல்ல பணிகளை முன்னெடுக்கக் கூடியவர்களுக்கு உறுதுணையாக, பக்கபலமாக இருந்து,   நல்ல சட்டங்கள் இச்சமூகத்தில் உருவாகவும்,  தவறான, நலமற்ற சட்டங்கள் அகற்றப்படவும், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகிறது.  ஒருங்கிணைந்து செயல்படுவோம். படைப்பனைத்திற்கும் முதல் பேறாக இருக்கக் கூடிய இறைவன் எப்போதும்
நம்மோடு இருக்கிறார்.  அவரைப் பின்பற்றுகிற நாமும் அவரைப் போல நல்லதை முன்னிறுத்தி குரல் எழுப்பக் கூடியவர்களுக்கு உறுதுணையாக இருந்து, நல்லதொரு மாற்றத்தை இச்சமூகத்தில் உருவாக்க முயலுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...