தேடி, கண்டு கொள்ள...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாளில் நாம் அனைவரும் இணைந்து மகதலா மரியாவை நினைவு கூருகிறோம். திருஅவை இவரை நினைவு கூருவதற்கு பல காரணங்கள் உண்டு. இந்த பெண்மணி தான் முதன்முதலில் ஆண்டவர் இயேசு உயிர்த்தார் என்ற செய்தியை சீடர்களுக்கு அறிவித்தவர். இந்தப் பெண்மணியைப் பற்றி விவிலியத்தில் பலவற்றை நாம் காண முடியும். இந்த பெண்மணியிடம் இருந்து தான் ஆண்டவர் ஏழு பேய்களை ஓட்டினார் என விவிலியத்தில் கூறப்படுவதாக விவிலிய அறிஞர்கள் கருதுகிறார்கள். இந்த பெண்மணி தான் விபச்சாரத்தில் பிடிபட்ட பெண். இந்த பெண்மணி தான் ஆண்டவர் இயேசுவின் இறப்பின் போது அவரது சிலுவை அடியில் நின்று கொண்டிருந்த பெண். தனது வாழ்வில் தடம் புரண்டு இருந்த இந்த பெண்மணி, ஆண்டவர் இயேசுவை கண்டு கொண்ட போது, மனம் மாறினார், தன்னுடைய செயல்களை திருத்திக் கொண்டார். தன்னிடம் இருந்த அனைத்து விதமான தீய பழக்கங்களையும் விட்டொழித்து, ஆண்டவர் இயேசுவின் உண்மை சீடத்தியாக மாறிப்போனார். ஆண்டவர் இயேசுவை பின்தொடர்ந்தார். அவரது பணி வாழ்வில் அவரோடு நின்றார். அவரது மரணத்திலும் அவரது சிலுவை அடியில் நின்று மரியாவுக்கு பக்கபலமாக இருந்தார்.
இன்று நாம் வாழுகின்ற இந்த உலகத்தில், மகதலா மரியாவை போல பாவ வாழ்வில் உழலக் கூடியவர்கள் ஏராளமானோர். ஆனால் நமது வாழ்வை அலசிப்பார்த்து திருத்திக்கொண்டு, ஆண்டவர் இயேசுவின் சீடர்களாக மாறுவதற்கு இந்த பெண்மணியின் வாழ்வு நமக்குக் கற்பிக்கின்றது. அப்பெண்மணியின் வாழ்வு நமக்கு கற்பிக்கின்ற பாடத்தை உணர்ந்து கொண்டு, வாழ்வில் நாம் செய்கின்ற பாவங்களை நினைவு கூர்ந்து, அந்த பாவங்களை விட்டொழித்து, ஆண்டவர் இயேசுவின் உண்மையான சீடர்களாக நாமும் இந்த மகதலா மரியாவை போல மாறிட இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம்.
எனவேதான் திருஅவையானது இந்த பெண்மணியை பற்றி நினைவு கூருகின்றது. ஒருவரை பற்றி நினைவு கூருகின்ற போது, அவரின் வாழ்வில் நடந்தவைகளை மனதில் கொண்டு, நமது வாழ்வில் மாற்றங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் இன்றைய நாளில் நாம் நினைவுகூரக் கூடிய இந்த மகதலா மரியாவின் வாழ்வு, நமக்கு ஒரு பாடத்தைச் சொல்லித் தருகிறது. அதுதான் நாம் நமது வாழ்வில் பின்பற்றுகின்ற தீய பழக்கங்களிலிருந்து மனம் மாறி, ஆண்டவரின் உண்மைச் சீடர்களாக மாற முடியும் என்ற பாடம். இந்த பாடத்தை உணர்ந்து கொண்டவர்களாக, நமது வாழ்வில் நாம் செய்கின்ற பாவங்களை நினைவு கூர்ந்து அவற்றை மாற்றிக் கொண்டு, ஆண்டவரின் உண்மைச் சீடர்களாக மாறிட இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம். இயேசுவை தேடி, கண்டு கொண்ட மகதலா மரியாவை போல, நாமும் ஆண்டவரை அறிக்கையிடக் கூடியவர்களாக மாறுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக