அழைத்தவரின் பாதையிலா நமது பயணம்?
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இன்று திரு அவையானது புனித மத்தேயு தூதரை நினைவு கூருகின்றது. இந்த மத்தேயு திருத்தூதரை, "என்னைப் பின்பற்றி வா" என இயேசு அழைத்ததை தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க கேட்கிறோம்.
இன்றைய நாளின் முதல் வாசகத்தில் திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய கடிதத்தில் கடவுள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு பணிக்கென அழைத்திருக்கிறார் என்பதை தெளிவுபடுத்துகிறார். அழைத்த இறைவனை எப்படி பற்றிக் கொண்டிருப்பது? அவரை முன்னிறுத்தி எப்படி இந்த உலகத்தில் பணி செய்வது? என்பதை தன் வாழ்வு அனுபவங்களின் அடிப்படையில் பவுல் எடுத்துரைக்கின்றார். பவுலும் இயேசுவால் அழைக்கப்பட்டவர், மத்தேயுவும் இயேசுவால் அழைக்கப்பட்டவர். இவர்கள் இருவருமே பாவிகள் என சமுதாயத்தால் கருதப்பட்டவர்கள்.
ஆம்! இன்று நாம் நினைவு கூருகின்ற மத்தேயு, சுங்கச்சாவடியில் அமர்ந்து வரி வசூலிக்கும் பணியை செய்து கொண்டிருந்தவர். சுங்கச்சாவடியில் அமர்ந்திருப்பவர் என்றால் அரசுக்கு இணங்கிப் போகக் கூடியவர். அரசின் சார்பாக நிற்கக் கூடியவர். அன்றைய யூத சமூகத்தில் நிலவிய அரசானது, மக்களை அதிகமான வரிகளை வசூலித்தும் சட்டங்களின் பெயரால் அடிமைப்படுத்தியும் கொண்டிருந்த ஒரு அரசு. இந்த அரசோடு இணைந்து ஒருவர் பதவியில் இருக்கிறார் என்றால், அவர் அரசுக்கு இணங்கிப் போய் அரசோடு இணைந்து மக்களைத் துன்புறுத்தக் கூடியவராகத் தான் இருப்பார் என்ற பார்வை நிலவியது. தங்களை துன்புறுத்துகின்ற அரசையும் அரசு சார்ந்த அதிகாரிகளையும், மக்கள் அறவே வெறுத்தார்கள்.
எனவேதான் மத்தேயுவை அழைத்தபோது, இவர் என்ன பாவிகளை எல்லாம் அழைக்கின்றாரே என்ற எண்ணமானது, அங்கு பேசப்பட்டது. ஆண்டவர் இயேசு இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவரையும் ஒன்றெனக் கருதுகிறார். நாம் ஒவ்வொருவருமே அவரது பிள்ளைகள், அவரால் படைக்கப்பட்டவர்கள். நம் படைப்பின் நோக்கம் என்னவென்பதை நாம் கண்டு கொள்வதற்காக இந்த உலகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்மை ஒன்றெனக் கருதியதன் காரணமாகத் தான், கடலில் வலை வீசிக் கொண்டிருந்தவரையும் தன் பணிக்கு அழைத்தார். அரசோடு இணைந்து பணி செய்கின்றவரையும் தன் பணிக்கென அழைத்தார். சமூகத்தில் புரட்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களையும் தன் பணிக்கென அழைத்தார். ஆண்டவரின் பார்வையில் அனைவரும் சமம். எது நல்லதோ, எது சமத்துவமானதோ, எது நீதியானதோ, அதை செய்வதற்கு இயேசு எந்தவித பாரபட்சமும் இன்றி, சமத்துவத்தோடு அனைவரையும் ஒன்றெனக் கருதி, தன் பணிக்கென அழைத்தார். அவரது அழைப்புக்கு செவி கொடுத்து அவரைப் பின் தொடர்வதற்காக வந்திருக்கின்ற நாம், ஒவ்வொருவருமே எத்தகைய மன நிலையோடு இந்த சமூகத்தில் பயணம் செய்கிறோம்? ஆண்டவரால் அழைக்கப்பட்டோம் எனவே, நாம் அவரை பின்பற்றி வந்துவிட்டோம். வந்த நாம் தகுதி உள்ளவர்களாக மாற்றிக் கொண்டோமா? என்ற கேள்வியை நமக்குள்ளாக எழுப்பி பார்ப்போம். நோயற்றவருக்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை என்கிறார் இயேசு. பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்கிறார் இயேசு. இந்த இயேசு விரும்பக்கூடிய இரக்கத்தை பொழிகின்ற, தேவையில் இருப்போருக்கு தேவையானதை செய்கின்ற ஒரு பணியாளராக, அவரை பின்பற்றக் கூடியவர்களாக நாம் இருக்கின்றோமா? கேள்வியை நாம் நமக்குள்ளாக எழுப்புவோம். நமது வாழ்வு எத்தகைய பாதையில் பயணம் செய்கிறது? நமது வாழ்க்கை என்னும் பாதையில் நாம் எதை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம்? என சிந்தித்துப் பார்ப்போம்.
உள்ளத்தில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு, நலமான நல்ல பணிகளில் ஈடுபட ஆண்டவர் அழைத்திருக்கிறார். அவர் அழைப்புக்கு ஏற்ற வகையில் நம்மைத் தகுதி உள்ளவர்களாக மாற்றிக்கொள்ள, இன்றைய நாள் வாசகங்கள் வழியாகவும், இன்று நாம் நினைவு கூருகின்ற புனித மத்தேயு திருத்தூதரின் வாழ்வும் நமக்கு அழைப்பு தருகின்றது. இயேசுவின் அழைப்புக்கு செவி கொடுத்து வந்த மத்தேயு, அழைத்தவரின் எண்ணத்திற்கு ஏற்ப, தன் எண்ணங்களை செதுக்கிக் கொண்டு, அவரது பாதையில் பயணம் செய்து ஒரு சாட்சிய வாழ்வு வாழ்ந்தார். இன்று இயேசுவால் அழைக்கப்பட்டிருக்கின்ற நாம் ஒவ்வொருவருமே, பல்வேறு பணிகளில் இருக்கலாம். குடும்பங்களிலோ, குருத்துவப் பணியிலோ, ஆசிரியப் பணியிலோ, ஏதோ ஒரு பணியில் இந்த சமூகத்தில், இந்த உலகத்தில், ஏதோ ஒரு பணியில் பொறுப்பில் நாம் இருந்து கொண்டிருக்கலாம். நாம் இருக்கின்ற பொறுப்புகளுக்கு தகுதி உள்ளவர்களாக நம்மை மாற்றிக் கொண்டோமா? ஆண்டவர் விரும்புகின்ற பணியை செய்கின்றோமா? சிந்தித்துப் பார்ப்போம். வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு, நல்ல சீடர்களாய் அவரைப் பின்பற்றிட, இறையருளை இன்றைய நாளில் இணைந்து வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக